ARTICLE AD BOX
புகழ் பெற்ற அந்தக் கல்வி நிறுவனமே பரபரத்தது! என்ன நடந்தது? எப்படி நடந்தது? இது போல் ஏன் நடக்கிறது? என்று ஒவ்வொருவரும் மூளையைக் கசக்கிக் கொண்டார்கள்?
என்னது? எல்லோருக்கும் மூளை இருக்கிறதா என்கிறீர்களா? எல்லோருக்கும் மூளை இருந்தால் இப்படியெல்லாம் நடக்காதே என்கிறீர்களா? சரிங்க! மூளை இருந்தவர்கள் கசக்கிக் கொண்டார்கள் என்று வைத்துக் கொள்வோமே! நான் சீரியசா கதையை ஆரம்பிச்சா, நீங்க கலாய்க்க வர்றீங்களா?
பாதிக்கப்பட்ட அந்த யுவதியோ, மருத்துவ மனையில்! - மயக்கமாக! டாக்டர்களும், நர்சுகளும் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்க, வெளியில் கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது! மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என காற்றடித்த பலூனாக கூட்டம் பல்ஜ் ஆகிக்கொண்டே போனது!
கடந்த முறை நடைபெற்ற ஆசியப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று, நமது நாட்டிற்காகப் பதக்கம் வாங்கி வந்த பிறகு, அவள் பெயர் பிரபலமானது!(இப்பொழுது பெயரை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ளதால் அவள் பெயர் வேண்டாம்!)
அவள் வசிக்கும் பகுதியில் வாழும் அனைவரும் அவளை நன்றாகவே அறிவர். அதனால்தான் அவளுக்கு உடல் நலமில்லையென்று தெரிந்ததும் ஊரே கூடிற்று!
தனியாக வீட்டில் இருந்தவள் மயங்கி விட்டாளாம்! யாரோ ஒருவர் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தாராம்! ஆனால் அவரை இப்போது காணோமாம்! எல்லாம் மர்மமாக இருக்கிறதாம்! அவளைக் கொண்டு வந்து சேர்த்தவரை செல்லில் தொடர்பு கொண்டால் அவர் எடுக்கவேயில்லையாம். செல் மட்டும் அடித்துக் கொண்டே இருக்கிறதாம்! எதிர் வீடோ இப்பொழுது பூட்டியிருக்கிறதாம். அந்த ஆள்தான் இவளிடம் தப்பு செய்து விட்டுத் தப்பித்திருக்க வேண்டுமாம்! யார் அந்த சார்? என்ற சந்தேகத்துக்கு விடை கிடைக்கவில்லையாம்!
இதுதான் சரியான நேரமென்று கையில் செல் வைத்திருக்கின்ற அனைவரும், அவரவர் மனதில் பட்டதை அடித்து விட ஆரம்பித்து விட்டனர்! தனியாக இருந்த பெண்ணைக் கற்பழித்து மருத்துவ மனையில் சேர்த்து விட்டுத் தப்பித்த அந்த சார் யார்? என்று ஒரு குரூப் எழுப்பி விட்டனர்!
யார் அந்த சார்? என்று இது வரை கண்டு பிடிக்க முடியாத காவல் துறையைக் கண்டிக்கிறோம்! என்று அடுத்த குரூப் வம்பு பேசியது!
‘பெண்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை! இந்த அரசு வக்கற்றது! வயதுப் பெண்கள் வெளியில் நடமாடத்தான் முடியவில்லையென்றால் வீட்டில் இருக்கும் பெண்களின் கதியும் இப்படி அதோகதி ஆகிறது!
இதனைக் கண்டிக்கும் விதமாக நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறோம்! பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்! என்று எதிர்க்கட்சிக் கூட்டணி அழைப்பு விடுத்தது!
சானல்கள் துரிதம் காட்டின! யார் அந்த சார்? ட்ரெண்ட் ஆகிட ஊரெங்கும் யார் அந்த சார்? யார் அந்த சார்? என்று பேச ஆரம்பித்தனர்.
நடந்தது இதுதான்! போட்டித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால், தாயுடன் மட்டும் வசித்த அவள், தாய் ஒரு முக்கிய உறவினரின் திருமணத்திற்கு வெளியூர் செல்ல, ’தான் தனியாக இருந்து கொள்வதாகவும், எதிர்த்த வீட்டில்தான் அங்கிளும் இருக்கிறாரே அதனால் பயமில்லையென்றும்’ கூறித் தனியாக இருந்தாள்!
போட்டித் தேர்வுக்குக் கண் விழித்துப் படித்ததாலும், நடுநடுவே ஓட்டப் பந்தயத்திற்காகக் கடினப் பயிற்சி மேற்கொண்டதாலும் அவள் சற்றே வீக்காக இருந்தாள்!அன்று மாலை கடினப்பயிற்சிக்குப் பிறகு வீட்டில் மயங்கி விட்டாள்! எதிர் வீட்டு அங்கிள் ஊரிலிருந்த தன் மனைவியையும், மகளையும் அழைக்கக் கிளம்பியவர், அவளிடம் இரவு கதவைத் தாழ்இட்டுப் படுத்துக் கொள்ள எச்சரிக்கை செய்து விட்டுப் போகலாம் என்று உள்ளே வந்தபோதுதான் மயங்கிக் கிடந்த அவளைக் கண்டார்!அவசரம் அவசரமாக ஒரு டாக்சியைப் பிடித்து மருத்துவமனையில் சேர்த்து விட்ட அவர், ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடி விட்டார்! அவளின் தாய்க்கு செல்லில் விஷயத்தைச் சொல்லி உடன் வரச் சொல்லலாம் என்று செல்லைத் தேடிய போதுதான் அவசரத்தில் செல்லை வீட்டிலேயே வைத்து விட்டதை உணர்ந்தார்.
இருப்பினும் சக பயணியிடம் செல்லை வாங்கி அவளின் அம்மாவிடம் பேசினார். நடந்ததைச் சொல்லி அவரை எச்சரிக்க, அந்த அம்மாவோ தான் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்!
அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்தில் அந்த அம்மா ஆஸ்பிடல் வந்து எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார். பசி மற்றும் களைப்பு காரணமாகவே மயக்கமடைந்திருந்த அவள் சரியான சிகிச்சைக்குப் பிறகு சுய நினைவுக்குத் திரும்பி விட, தாயுடன் வீடு திரும்பி விட்டாள்!
எதிர்த்த வீட்டு அங்கிள்தான் அந்த சார் என்பதை அந்த அம்மா விளக்கமாகச் சொல்ல, எல்லோரும் அமைதியாகினர்! செல் பிரியர்களோ அடுத்து இது போன்று ஏதாவது நடக்க வேண்டுமென்று விரும்பி ஆர்வத்துடன் காத்திருந்தனர்!