சிறுகதை: மனதினுள் பெய்யும் மாமழை!

18 hours ago
ARTICLE AD BOX

சில்லென்ற காற்று அவிழ்த்து விட்ட சட்டை பட்டன்களை கடந்து என் நெஞ்சுக்குள் சிலு சிலுத்தது. ஒரு நிமிடம் கைகள் புல்லரிக்க வண்டியின் வேகத்தை நான் குறைக்காமல் சென்று கொண்டிருந்தேன். காதுக்குள் மாட்டியிருந்த இயர் போனில் "மொத தபா பார்த்தேன் உன்ன, பேஜாராகி போயி நின்ன பொண்ண" பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

காற்றில் தலைமுடி இங்கும் அங்கும் அலை மோத. கைகளில் தூறல் தெறிக்க, அண்ணாந்து வானத்தைப் பார்த்தால், நிலா காணவில்லை. இருள் கவ்வி இருந்தது, விண்மீன்கள் இன்று விடுமுறை எடுத்துக் கொண்டன போலும்.

அதற்குள் அடைமழை தொடங்கி விட்டது. எங்கு ஒதுங்க என்று தெரியவில்லை, அருகில் ஒரு பஸ் ஸ்டாப் தெரிய, அதனுள் வண்டியோடு உள்ளே சென்று நிறுத்தினேன். வண்டியில் இருந்து இறங்கும் போது எதிரே மின்னல் ஒளி பளிச்சிட, தலையில் துப்பட்டாவை சுற்றிக் கொண்டு அழகே உருவான ஒருத்தி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒருமுறை மின்னல் வெட்ட ஆயிரம் வாட்ஸ் மின்னொளியில் மலர்ந்த வெள்ளை ரோஜா போல அவள் முகம் தெரிந்தது, "ஒரு மழையில் நான் கண்ட மாணிக்கமா என் மனதில் உந்தன் ஆதிக்கமா இது ஒரு நாள் இருநாள் நீடிக்குமா?" என்று பாடல் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

என் தலைமுடியை கோதிக் கொண்டே அவளைப் பார்த்தேன். அவளோ துப்பாட்டாவை எடுத்து பிழிந்து உதற அதில் சில துளிகள் என் முகத்தில் தெறித்தன.

நேரம் சென்றாலும் மழை விடுவதாக இல்லை. அவ்வப்போது நானும் அவள் புறம் தெரியாதது போல் பார்த்தேன். அவள் ஒரு நொடி தீர்க்கமாக என்னை பார்த்தாள்!

என்ன மாதிரியான கண் அது? வாளுக்கு அடியில் துள்ளும் மீன்களை போல கண்கள், பனிப்பாறையில் சிக்கிய கருப்பு வைரத்தை போல அதனுள் கருவிழி இருந்தது. இவள் பெயர் கயல்விழியாக இருக்குமோ! என்று நினைத்துக் கொண்டேன்.

அவளிடம் பெயரை கேட்டு விடலாமா? என்று மட்டும் 2 மணி நேரம் யோசித்தேன். அவ்வப்போது பேச வாய் வந்தாலும் வெளியில் காற்று தான் வந்தது.

சட்டென்று ,"ஹாய்! என் மொபைல் ஆப் ஆகிட்டு, நேரம் வேற ஆகிட்டு, அம்மா வீட்டில் பயந்துட்டு இருப்பாங்க, உங்க போனில் ஒரு கால் பண்ணிக்கட்டுமா பிளீஸ்? என்றாள் அவள் புன்னகையுடன்.

ஹ்ம்ம், இந்தாங்க. என்று கொடுத்து விட்டு,போன் திரை வெளிச்சத்தில் காணாமல் போன நிலாவை இப்போது கண்டுபிடித்தேன்.

சார், "இந்தாங்க உங்க கிட்ட ஒரு நிமிசம் அம்மா பேசனுமாம்". என்று போனை கொடுத்தாள்.

சரிங்க ஆன்ட்டி, பயப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். என்று சொல்லி கட் செய்தேன்.

என்னங்க, இப்ப தான் பார்த்தீங்க அதுக்குள்ள பிரண்ட்ன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கிங்க?

"ப்ச், சாரி, நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாதுல, புது ஆள் பக்கத்தில் இருக்காருன்னு சொன்னா இன்னும் பயப்படுவாங்க" அதான்.

சரி நான் ஏதும் சொல்லல. நீங்க எது சொன்னாலும் ஓகே தான்.

"ஓஹோ! அப்ப நீங்க என்னோட எனிமி போங்க" என்று சிரித்தாள்.

என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்தேன் நான். உங்க பேர் என்ன?

"ஏன் தெரியாதா? என் பெயர் மீனா" போன் பேசும் போதே சொன்னேனே.

உங்க கண்ணை பார்க்கும் போதே நினைச்சேன். கயல்விழி இல்ல மீனா அப்படி தான் இருக்கும்னு.

"அப்படியா?" என்று சிரித்தாள்.

ஹம்ம், அப்படி தான். எப்படி இங்க மாட்டிக் கிட்டிங்க?

"அதை ஏன் கேட்கிறீங்க, என் பிரண்டோட ரிசப்ஷனுக்கு வந்தேன். திரும்பி வீட்டுக்கு போகும் போது என் ஆக்டிவா ஆப் ஆகிட்டு, ஸ்டார்ட் ஆகவே இல்ல. தள்ள முடியாம அங்கேயே லாக் பண்ணிட்டு, பஸ்ஸில் போயிடலாம்ன்னு" இங்க வந்துட்டேன்.

ஒரு நல்ல வண்டியா வாங்க கூடாதா? மீனா!

சட்டென்று அவள் முறைத்தாள்.

"உங்க வண்டி தான் நல்லா இருக்கே! அப்பறம், எதுக்கு இங்கே நிக்கிறிங்க?" என்றாள் மீனா

பயங்கர காத்துல, ஒரு மரக்கிளை என் மேல விழ பார்த்தது, ஜஸ்ட் மிஸ் என்றேன்.

"அச்சச்சோ" என்று உச் கொட்டினாள்.

ரொம்ப நேரமா நிக்கிறிங்களே மீனா. கொஞ்சம் நேரம் உக்காருங்க, எப்படியும் விடிஞ்சா தான் பஸ் வரும்னு நினைக்கிறேன்.

"நீங்களும் உக்காருங்க, கால் ரொம்ப வலிக்குது" என்றாள் மீனா. அப்படியே அவள் காலை என் பைக் சீட்டில் வைத்துக் கொண்டாள்.

"உங்க பேர் என்ன? நானும் கேட்கவே இல்ல" என்று சிரித்தாள்.

நீங்களே கண்டுபிடியுங்களேன்!

"நீயே சொல்லு ராசா, என்னால் யோசிக்க முடியாது."

அதான் சொல்லிட்டிங்களே ராஜான்னு. உங்களை வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க, மீனுக்குட்டின்னா?

"உங்களை வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ராசக்குட்டின்னா?" ராசாக்குட்டி, ஏய் ராசாக்குட்டி

ஓய்.... மீனுக்குட்டி, மீனுக்குட்டி...

ஏய்..." என் பேரை சொல்லி கூப்பிடுவியா? அடி வாங்க போறீங்க".

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கிரிஜா பாட்டி திரும்பி வருவாளா?
Tamil short story - manathinul peyyum maamazhai

ஓ... உங்க பாய்பிரண்டை கூட்டிட்டு வந்து என்னை அடிக்க போறீங்க அதானே!

"எனக்கு பாய்பிரண்ட் இருந்திருந்தா, இந்நேரம் வந்து கூட்டிட்டுப் போயிருக்க மாட்டானா?" என்று சலித்துக் கொண்டாள்.

இவ்வளவு அழகா இருக்கீங்க. ஆனா...?

"போதும் போதும்" என்றாள் மீனா.

சரி நான் எதுவும் சொல்லல .

விடிய விடிய ஏதோதோ பேசினோம். இரண்டடி தள்ளி அமர்ந்திருந்த மீனா இப்போது அருகில் அமர்ந்திருந்தாள். என் மனதிலும்.

"ஐ... பஸ் போக ஆரம்பிச்சிட்டு, நான் கிளம்ப வேண்டியது தான்" என்றாள் மீனா.

விடிஞ்சதும் போலாமே மீனா?

"ஏன், இப்போ போனா, பஸ் பின்னாடி போகுமா?"

இல்ல, போகும். ஹம்ம்ம்....

"என்ன ராசாக்குட்டி? எதுக்கு இழுக்கிற"

இல்ல மீனுகுட்டி, இன்னும் கொஞ்ச நேரம்.

"ஆஹா, போதும் பா" மீனா சிணுங்கினாள்.

சரி, உன் நம்பர் கொடுத்துட்டு போ.

"எதுக்கு ராசா?"

கொடு, அவ்வளவு தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கற்பூர தீபம்!
Tamil short story - manathinul peyyum maamazhai

"அவ்வளவு சீக்கிரம் நம்பர் கொடுத்துடுவேனா?"

அப்ப, தர மாட்டிங்க. ப்ச்

"உன்னை பார்த்தா பாவமா இருக்கு ராசா, ஆனாலும் சும்மா தர முடியாதே!"

பஸ் ஒன்று ஸ்டாப்பிங் அருகே வந்தது. மீனா ஹேண்ட் பேக்கிலிருந்து சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுத்தாள், கூடவே ஒரு சாவி ஒன்றும் இருந்தது. மீனா சட்டென்று பஸ்ஸில் ஏறினாள்!

"என் ஆக்டிவாவை எடுத்துட்டு வந்து வீட்டில் விட்டுடு ராசா"

உன் அட்ரஸ் தெரியாதே?

"நீ எல்லாம்"... மீனா தன் தலையில் கை வைத்தாள்.

"உன் போனில் என் அம்மா நம்பர் இருக்கு, பேசு" என்று கத்தினாள்.

பஸ்ஸும் கிளம்பி விட்டது.

மழையில் தெளிந்த வானத்துடன் விடிந்த அழகிய காலை நேரம். காதில் "உயிரே நீயும் நானும் பிரிந்தது புவியீர்ப்பு மையத்தில் தானே! இரு துருவம் சேரும் அந்த ஓரிடம், அங்கே தான் நாம் சேர்ந்தோமே!" இயர் போனில் ஒலித்துக் கொண்டிருக்க நான் ஆக்டிவாவை மகிழ்ச்சியாக தள்ளிக் கொண்டிருந்தேன். "இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை அன்பே!"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இடைவேளை
Tamil short story - manathinul peyyum maamazhai
Read Entire Article