ARTICLE AD BOX
மூன்று வருடங்களுக்குப்பின் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புகிறான் சேது. அப்பா, அம்மா, மற்றும் கட்டிய மனைவியையும் ஒரு வயது மகன் ராமுவையும் பிரிந்து தனியே வெளிநாடு செல்ல வேண்டிய துர்பாக்யம். நடுவில் அப்பா அம்மா இறந்ததற்கு கூட வரமுடியவில்லை. நல்லவேளை தம்பி எல்லா காரியமும் செய்து முடித்தான்.
இதுவரை குழந்தை ராமுவின் வளர்ச்சியையும், மனைவி சீதாவின் சோகம் ததும்பும் முகத்தையும் வாட்ஸ் அப்பில் பார்த்ததோடு சரி.
வாழ்க்கையும் சினிமா மாதிரி படமாய் போச்சு.. இனிமேல் வாழ்க்கை இங்கே தான். சொந்தமாய் ஒரு மளிகைக்கடை வைக்குமளவுக்கு சம்பாதிச்சாச்சு.
ஐ! வீடு வந்தாச்சு!!
மனைவிக்கும் மகனுக்கும் ஏராளமாய் பரிசுகள்... மூட்டையாய் ஆட்டோவிலிருந்து இறக்கினான்.
“வந்துட்டீங்களா?” சீதா வாசலிலேயே சேதுவைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டாள்.
“சே! என்ன இது? யாராவது பாத்துடப்போறாங்க” என்ற சேதுவை, 'அப்பா'வென ஓடி வந்து காலை கட்டிக்கொண்டான் மகன் ராமு.
“குட்டிப்பயலே!” என்று ராமுவை தூக்கி முத்தமழை பொழிந்தான்.
ஐந்து நிமிடம் வாசலில் அன்பு ஸ்டாப்!
மகனை கையில் தூக்கிக்கொண்டு, “மூட்டையை தூக்கிட்டு உள்ளே வா” என அன்பு மனைவியை கிண்டலடித்தான்.
சீதா தூக்குவதை பார்த்து சிரித்தான் சேது.
“மெல்ல மெல்ல மூட்டையை பாத்து இறக்கு. பரிசுப்பொருட்கள் உடைஞ்சிடும்.”
“மூட்டையை பிரிப்போமா?” என்று குழந்தையை கேட்க, அதன் ஆனந்தம் ததும்பும் சிரிப்பில் மயங்கினான்.
ஆளுக்கொரு ஒரு பெரிய சாக்லேட்டை பிரித்து தந்தான்.
சீதா, "எதுக்குங்க இத்தனை புடவை? இவ்வளவு பரிசுப்பொருட்கள்? செலவாளி நீங்க,” என்று சேதுவின் முதுகில் செல்லமாய் தட்டினாள்.
காபி டிஃபன்கொடுத்து, "குளிச்சுட்டு வாங்க விருந்து சாப்பிடலாம்” என்று சொல்ல, “கொஞ்ச நேரமாகட்டுமே” என்ற சேதுவை “போய்க்குளிங்க” பாத்ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போனாள்.
குழந்தை பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, ஊர் கதைகளையும் சம்பவங்களையும் பேசி மகிழ்ந்தனர்.
“ஸ்கூலில் டீச்சர்னு யாரும் மதிக்கறதில்லை. எல்லா வேலையும் செய்யச்சொல்றாங்க. சனி ஞாயிறுனு பாக்கறதில்லை. வர வர முடியலைங்க...”
சீதா நடப்பை சொல்ல, “அதான் நான் வந்துட்டேனில்லே கவலையை விடு. நான் பெரிய மளிகைக்கடை போடப்போறேன் அதைப்பாத்துக்க ஆள் வேணும். நீ வேலையை விட்டுட்டு முதலாளி ஆயிடலாம்”. ஆறுதலாய் பேசினான்.
“நல்ல வேலைங்க. கடையில் அவ்வளவு வருமானம் வருமா?”
“மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் முதலாளியம்மா! அதுவரை பொறுங்க.” கை கூப்பி கிண்டலடித்தான்.
“சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. மாலையில் சினிமாவுக்கு போகலாம்” என்றான்
“ஹை சினிமா!” எ்ன்று குழந்தை குதிக்க, “பாத்தீங்களா? குழந்தையின் சந்தோஷத்தை? அப்பாவோடு வெளியில் போக ஆசையிருக்காதா? இனிமே எங்களை விட்டு எங்கேயும் போகக்கூடாது. நான் விட மாட்டேன்” சேதுவை கட்டிக்கொண்டாள்.
சினிமா பார்த்து, நைட் டின்னர் முடித்து, வீட்டுக்கு வந்து இரவுஜோக்கடித்து, பாட்டுப்பாடி…இரவு முழுதும் ஒரே ஜாலி தான்!
காலையில் எழுந்ததும் காபி குடித்த பின், மகன் ராமுவோடு மாடியில் விளையாடினான்.
பின் ராமுவுக்கு கதை சொன்னான்.
“ஜாலி ஜாலி” குதித்தான் ராமு.
“ஸ்கூலுக்கு டயமாகலே?”
“இல்லை. பக்கத்து வீட்டு மாமா வருவார். அவர் தான் ஸ்கூலுக்கு கூட்டிப்போவார்.”
“மாமாவா?”
“ஆமாம். தினமும் வருவார்.”
“தினமுமா? எப்பவெல்லாம் வரு்வார்?”
“நிறுத்துங்க. குழந்தையிடம் என்ன கேட்கறீங்க?” சீதாவின் காட்டமான குரல் சேதுவின் காதை அதிரடித்தது.
வெலவெலத்து போனான் சேது.
“என்ன தப்பா கேட்டேன்?”
“நீங்க எவ்வளவு அசி்ங்கமான மீனிங்கில் பேசறீங்கனு தெரியுதா?” கண்களில் கோபம் தெறித்தது.
“இதிலென்ன அசிங்கம்? சும்மா சீன் போடாதே!” சேதுவின் குரல் உயர்ந்தது.
”பக்கத்து வீட்டுப்பையன் என் தம்பி மாதிரிங்க. ரெண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்து பில்டிங். அதனால் நானே கூட்டிப்பறேன். அக்கானு உதவி பண்றான்.”
"அவனுக்கு நீ என்ன உதவி….”
“வாயைப்பொத்துங்க. என்னை சந்தேகப்படறீங்களா?” கத்தினாள்.
“இன்னும் இல்லை.”
“என்ன?” என்று ஆத்திரத்தில் சட்டையை பிடித்து இழுக்க, சட்டை கிழிந்தது.
“என்ன ஓவராப்போறே!" ஓங்கி அறைந்தான் மனைவியை.
சீதா அழுதபடி கீழே இறங்கிப்போனாள்.
“என்னப்பா அம்மாவை அடிக்கறே. உன்னை பிடிக்கவேயில்லை. நீ ஊருக்கே போ," என்று தள்ளி விட்டான் ராமு.
கீழே சத்தம் கேட்க, ஓடிப்போன சேது, சீதா கையை அறுத்துக்கொண்டு கதறினாள்.
“என்ன காரியம் செஞ்சே?” பதறியபடி காரில் சீதாவுடன் பறந்தான் சேது.
மருந்து போட்டு கட்டுப்போட்ட டாக்டர் “இனிமே ஒன்னும் பயமில்லை. கையை அறுத்துக்கற அளவுக்கு சண்டை போடக்கூடாது. நீங்க போகலாம்,” என்றார்.
காரில் போகும்போது “ஸாரி சீதா தப்பா பேசிட்டேன்” என்று சேது நா குழற,
“பாத்து பேசனும்... ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும். இனிமே இப்படி பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க” என்ற சீதாவின் கையில் சத்யம் செய்தான் சேது.