ARTICLE AD BOX
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனத்தை இயக்கி ஏற்படுத்தும் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வாகனங்களை இயக்கும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்பி நீரஜ் டாங்கி என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வ பதிலை தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க : சிதம்பரத்தில் கொள்ளையன் சுட்டுப் பிடிப்பு! 24 மணிநேரத்தில் 6-வது நபர்!
அதில் தெரிவித்திருப்பதாவது:
18 வயதுக்கு குறைவான ஓட்டுநர் உரிமம் பெறாத சிறார்கள் வாகனத்தை இயக்குவதை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் மின் கட்டண அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
2023 - 24 காலகட்டத்தில் மட்டும் சிறார்களால் 11,890 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 2,063, மத்தியப் பிரதேசத்தில் 1,138, மகாராஷ்டிரத்தில் 1,067 விபத்துகள் நடந்துள்ளன.
மேலும், மாநிலங்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, பிகாரில் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக 1,316 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டு, ரூ. 44.27 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சத்தீஸ்கரில் ரூ. 1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 65 வழக்குகளும் தில்லி மற்றும் உத்தரகண்டில் தலா 22 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.