ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு பெரிய ஐடி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் சிறு விவசாயிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. அதுவும் இந்தியா போன்ற விவசாய நாட்டில் சிறு குறு விவசாயிகள் காலநிலை மாற்றம், மண்வளம் மற்றும் பூச்சிகளினால் ஏற்படும் பிரச்சனை என விவசாயம் செய்கையில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு லாபகரமான.. அதே சமயம் புத்திசாலித்தனமான ஐடியாக்களை வழங்க பெரிதும் உதவும்.
இனிவரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தை சிறு குறு விவசாயிகள் பயன்படுத்த தொடங்கி விட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

விவசாயத்தின் எதிர்காலத்தை AI தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றும்?: பயிர் மேலாண்மை, மண் தர பரிசோதனை, காலநிலை முன்னறிவிப்புகள், பூச்சிகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம். இதிலிருந்து துல்லியமான தகவல்களை விவசாயிகள் பெற முடியும். இதன் விளைவாக விளைச்சல் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.
ஸ்மார்ட் கிராப் மானிட்டரிங்: ட்ரோன்கள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி AI அடிப்படையிலான சிஸ்டம்களை வைத்திருந்தால் வயல்களை நீங்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். இது விவசாயிகளுக்கு பயிர் ஆரோக்கியம் பற்றிய மதிப்பு மிக்க தகவல்களை வழங்கும். இதனால் தண்ணீர் எப்போது தேவை? உரம் எப்போது தேவை? பூச்சிக்கொல்லிகளை எப்போது பயன்படுத்த வேண்டும்? என அனைத்தையும் திறம்பட கையாள முடியும்.
வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்புகள்: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் துல்லியமாக வானிலை தகவல்களை பெற முடியும். இது சரியான நேரத்தில் விதை விதைக்கவும், அறுவடை செய்யவும் விவசாயிகளுக்கு உதவும். எதிர்பாராத வானிலை காரணமாக பயிர் சேதமடைவதை இது முற்றிலுமாக குறைக்க உதவும்.
மண் மற்றும் பயிர் பகுப்பாய்வு: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மண் தரத்தை ஆய்வு செய்து அதில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுகளை கண்டறிய உதவும். அதன் அடிப்படையில் விவசாயிகள் எந்தெந்த பயிரை தங்கள் நிலத்தில் பயிரிடலாம் என தேர்ந்தெடுத்து உற்பத்தியை அதிகரிக்கலாம். அதேசமயம் மண்ணில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் சரியான உரத்தை பயன்படுத்த முடியும்.
பூச்சிகள் மற்றும் நோய் கண்டறிதல்: விவசாயிகள் பயிர்களில் வரக்கூடிய பூச்சிகள் மற்றும் பயிர்களுக்கு வரக்கூடிய நோய்களை கண்டறிய AI அடிப்படையிலான மொபைல் அப்ளிகேஷன்கள் உதவுகின்றன. இது போன்ற பிரச்சனைகள் பரவுவதற்கு முன்பே அவற்றை கட்டுப்படுத்தி சரியான நடவடிக்கை எடுக்க உதவும்.
AI தொழில்நுட்பம் ஸ்மார்ட் விவசாயத்தை ஊக்குவிக்கிறது. இதனால் வளங்கள் வீணாவது குறைந்து உற்பத்தி செலவுகளைக் குறைக்க முடியும். இது சிறு விவசாயிகளுக்கு கூட அதிக லாபம் ஈட்ட உதவும்.
ஆகவே, செயற்கை நுண்ணறிவு விவசாயத்துறையில், குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சக்தி வாய்ந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.