ARTICLE AD BOX
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு, ஏதோ தமிழகம் சந்திக்கும் பாதிப்பு மட்டுமல்ல, பல மாநிலங்களும் பாதிக்கின்றன! அதற்கான எதிர்ப்பில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்துமே ஒன்று பட்டு போர் குரல் கொடுக்கும் என்பதை இந்த கூட்டத்தின் வழியே பாஜக தலைமைக்கு பட்டவர்த்தனமாக புரிய வைத்துள்ளார், ஸ்டாலின்!
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ( மார்ச்-22, 2025) சென்னையில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும். இதில் பாதிக்கப்படும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளதானது குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமாகும்.
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், வடமாநிலங்களுக்கு சுமார் 150 தொகுதிகள் அதிகரிக்கும் போது, தென் மாநிலங்களுக்கு 35 தொகுதிகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதேயாகும்.
அவரவர் தாய் மொழியில்…
இந்த நிகழ்வு மிகவும் திட்டமிட்டு கவனமுடன் நடத்தப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள வெவ்வேறு மாநிலத் தலைவர்களின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளில் அவர்களது பெயர் ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழியிலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல்வர் ஸ்டாலினின் தமிழ் மொழியில் பேசப்பட்ட வரவேற்புரையை கூட்டத்தில் பங்கேற்றோர் அவரவர் தாய் மொழியில் கேட்கும் வகையிலும் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது.
பினராயி விஜயன் – கேரள முதல்வர், ரேவந்த் ரெட்டி – தெலங்கானா முதல்வர், பகவந்த் மான் – பஞ்சாப் முதல்வர், டி.கே. சிவக்குமார் – கர்நாடக துணை முதல்வர், காணொளி மூலம் நவீன் பட்நாயக் – பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர், ஒடிசா, மிதுன் ரெட்டி – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆந்திரப் பிரதேசம், பல்விந்தர் சிங் புண்டர் – ஷிரோமணி அகாலி தளம், பஞ்சாப், பி.எம்.ஏ. சலாம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), கேரளா, பக்த சரண் தாஸ் – ஒடிசா காங்கிரஸ் தலைவர்,சஞ்சய் குமார் தாஸ் பர்மா – பிஜு ஜனதா தளம் (பிஜேடி), ஒடிசா ஆகியோர் கலந்து கொண்டதானது, இது பலரையும் பாதிக்க்கிறது என்பதையே காட்டுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தனதுரையில், தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.என்றார்.
தொகுதி மறு சீரமைப்பு தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
இதில் பேசிய கேரள முதல்வர், பினராயி விஜயன் “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே, மத்திய அரசு தொகுதி மறுவரையறைக்கு அவசரம் காட்டுவது ஏன்? கடந்த முறை நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேரளாவின் மக்கள் தொகை பெருக்கம் 4 சதவீதமாகத் தான் இருந்தது.
இந்தத் தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மறுக்கிறது. பிரிட்டிஷாரின் அதிகார குவிப்புக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது. மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் கலாசாரம் என்பது அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது. அதுதான் இந்தியாவின் அடித்தளம். மையப்படுத்துதல் என்பது மாநில அரசுகளின் பல நல்ல முன்னெடுப்புகளை ஒருபோதும் அனுமதிக்காது.
தற்போதைய தொகுதி மறுவரையறை செயல்பாடு வட இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்று அறிந்திருப்பதால், மத்திய அரசு இதனை முன்னெடுக்கப் பார்க்கிறது. மத்திய அரசு மக்கள் தொகை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி நமது பங்கினை குறைக்கிறது. கடந்த 1976 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தான் மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆனால் கேரளா போன்ற சில மாநிலங்கள் மட்டுமே அதை சிறப்பாக செயல்படுத்தின.
இந்தக் கூட்டத்தை நடத்தியதற்காக நான் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் இந்தத் தொகுதி மறுவரையறை செயல்பாட்டை முன்னெடுக்கிறது. தொகுதி மறுவரையறை என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும். எந்த ஒரு ஆலோசனையும் நடத்தாமல் பாஜக தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கிறது.” என்று பேசினார்.
மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா!
இதனைத் தொடர்ந்து கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் பேசுகையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புதான் இந்த கூட்டம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம். மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்பதாக கடந்த ஆண்டே கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையாக இருக்க வேண்டும். இது வடக்கு – தெற்கு இடையிலான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.என்றார்.
தொகுதி மறுவரையறை நியாயமற்றது.
ஓடிசா முன்னாள் முதல்வர் பிஜி பட் நாயக் காணொளியில் பேசியது: மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலன்களைப் பாதுகாக்க பிஜு ஜனதா தளம் எல்லாவற்றையும் செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு, சந்தேகங்களைப் போக்க வேண்டும். இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
தொகுதி குறைக்கபடுவதால் அச்சம், கடுமையான பதற்றம்
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்குப் பிறகு, அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு மக்களவையில் இடங்களை ஒதுக்கும் தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்பு கட்டமைப்பு கட்டாயமாக்குகிறது.
ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட தொகுதி மறுவரையறைக்கான காலக்கெடு 2026 ஆம் ஆண்டில் முடிவுக்கு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் போது பல மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்களுக்கு, தங்கள் பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என்ற அச்சம் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
1971 முதல் 2011 வரையிலான 40 ஆண்டு காலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது. கடந்த 14 ஆண்டு காலத்தில் இந்தப் பங்கு மேலும் குறைந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தேசிய முன்னுரிமையாக இருந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தென் மாநிலங்கள் காட்டிய நேர்மையின் விளைவாக இந்தப் பங்கு குறைந்துள்ளது. இன்றைய நிலையில் மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டில் தென் மாநிலங்களின் பங்கேற்பு கணிசமாகக் குறையும். அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப்படி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, அதற்கேற்ப அரசியலமைப்பை திருத்த வேண்டியது மிகவும் அவசியம்.
பாஜக வெற்றி பெற முடியாத மாநிலங்களுக்கு பாதிப்பு:
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தன் உரையில், தமிழகம், பஞ்சாப் மக்கள் மட்டுமல்ல, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கும். “தாங்கள் வெற்றி பெரும் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், தோல்வியைச் சந்திக்கும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே பாகஜவின் நோக்கமாகும். அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளும் குறைக்கப்படும். ஏனெனில் பாஜக பஞ்சாப்பில் வெற்றி பெறாது. இந்தத் தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும்”
ஆக, நடைபெற்றுள்ள இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசு தான் நினைத்தபடி இஷ்டத்திற்கு தொகுதி மறுவரையறையை செய்ய முடியாது. அதற்கு நாடு தழுவிய முறையில் கடும் எதிர்ப்பு உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது.
அஜிதகேச கம்பளன்