ARTICLE AD BOX
தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், கன்னட சினிமாத்துறையின் மூத்த நடிகருமான கிச்சா சுதீப், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நான் ஈ, பாகுபலி, புலி போன்ற திரைப்படங்களால் பரிட்சையமானவர். 2016-ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் Kotigobba 2 (தமிழில் ‘முடிஞ்சா இவன புடி’ என வெளியானது) என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
தற்போது அவருடைய நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘மேக்ஸ்’ என்ற திரைப்படமானது திரையரங்கில் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அத்திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலை ஈட்டி ஹிட்டடித்துள்ளது. விமர்சன ரீதியாகவும் அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த நடிகருக்கான கர்நாடகா அரசு விருதை கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
என் முடிவு உங்களை ஏமாற்றியிருந்தால் மன்னித்து விடுங்கள்..
2019-ம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் கர்நாடகா மாநில அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'பயில்வான்' திரைப்படத்துக்காக நடிகர் கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. கொரோனோ லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் தாமதமாக இந்த விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த நடிகருக்கான விருதை கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார். அதற்கான காரணத்தை அவர் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “மரியாதைக்குரிய கர்நாடக அரசு மற்றும் ஜூரி உறுப்பினர்களே, சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். இந்த கௌரவத்திற்காக மரியாதைக்குரிய நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளை பெறுவதை நான் நிறுத்தியதோடு இன்றும் அதே முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
இந்த முடிவு பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. தங்கள் படைப்பில் முழு முயற்சியுடன் பணியாற்றும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் அதைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
என்னுடைய இந்த முடிவு ஏதேனும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும், மாநில அரசாங்கத்திடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மேலும் எனது விருப்பத்தை மதித்து நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.