ARTICLE AD BOX
துபாய்: 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73, அலெக்ஸ் கேரி 61, டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்தனர். முகமது ஷமி 3, வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம்இறங்கிய இந்திய அணியில் சுப்மன்கில் 8, ரோகித் சர்மா 28 ரன்னில் வெளியேற ஸ்ரேயாஸ் அய்யர் 45, அக்சர் பட்டேல் 27 ரன்னில் அவுட் ஆகினர். விராட் கோஹ்லி 84 ரன்னில் ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 24 பந்தில் 28ரன் எடுக்க , கே.எல்.ராகுல் 34 பந்தில் நாட் அவுட்டாக 42 ரன் அடித்தார்.
48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 267ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பைனலுக்குள் இந்தியா நுழைந்தது. விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: கடைசி பந்துவீசப்படும் வரை வெற்றி உறுதியில்லை என்பது தான் இந்த போட்டியின் சுவாரஸ்யம். சேசிங்கை பக்குவமாகவும், நிதானமாகவும் அணுகினோம் என நினைக்கிறேன். துபாயில் உள்ள பிட்சுகளில் ஒருவித சீரற்ற தன்மை இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய பிட்ச்சை விட இந்தபிட்ச் கொஞ்சம் நன்றாக இருந்தது. பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பற்றியெல்லாமல் ரொம்ப யோசிக்காமல் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்த நினைத்தோம். கோஹ்லி இதே பாணியில் அணிக்காக பல ஆண்டுகளாக செய்து கொடுத்திருக்கிறார்.
கோஹ்லி களத்தில் இருக்கும்போது எந்த பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருந்தோம். கோஹ்லி- ஸ்ரேயாஸ் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தோம். இதே போல் இறுதி கட்டத்தில் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்ததும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதிப் போட்டி குறித்து யோசிக்கவில்லை. தற்போது கிடைத்திருக்கும் நாளில் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். நேரம் வரும்போது அதுபற்றி யோசிப்போம். தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து என இரண்டும் சிறந்த அணிகளாக விளங்குகிறார்கள். இறுதிபோட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என ரோகித் சர்மா கூறினார். ஆட்டநாயகன் விராட் கோஹ்லி கூறுகையில், நான் எப்போதும் தனிப்பட்ட சாதனைகளை பற்றி யோசித்ததே இல்லை. தனிப்பட்ட சாதனைகளை பற்றி அதிகம் நினைக்காத போது தான் அவை நிகழும் என்று கூடநினைக்கிறேன்.
இன்றைக்கு சதம் அடித்திருந்தால் நல்ல விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட அணியின் வெற்றி தான் முக்கியம். தனிப்பட்ட சாதனைகளை பற்றி நினைக்கும் நிலையில் நான் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்சை போன்று தான் இன்றும் ஆடினேன். போட்டியின் சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆட வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம். சிங்கிள்ஸ் எடுப்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. எளிதானதும் கூட. போட்டியின் எந்த கட்டத்திலும் எனக்கு அவசரமே இல்லை. விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு போட்டியை கடைசி வரை எடுத்துச்சென்றால் எதிரணியினரே நமக்கு ரன்களை எடுப்பதற்கான பந்துகளை வீசுவார்கள், என்றார்.
The post சிங்கிள்ஸ் எடுப்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று: ஆட்டநாயகன் கோஹ்லி பேட்டி appeared first on Dinakaran.