ARTICLE AD BOX
சூப்பர்ஸ்டார்களுடன் 100% உண்மையான கதையை எடுக்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
100% உண்மைக் கதையை எடுக்க முடியாது
நீங்கள் சூப்பர்ஸ்டார்களை இயக்கும்போது கதையில் 100 சதவிகிதம் உண்மையாக இருக்க முடியாது. ரசிகர்களுக்காகவும் பணத்திற்காகவும் சமரசம் செய்யவேண்டியுள்ளது.
இயக்குநராக 100 சதவிகிதம் நம்மால் செல்ல முடியாது. ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும். அதையும் யோசிக்க வேண்டியுள்ளது. அந்தப் பகுதிகள் மிகவும் கடினமானவை.
மிகப்பெரிய நடிகர்கள் தங்களது நட்சத்திர அந்தஸ்தை வலுவாக வைத்திருக்க நினைக்கிறார்கள். மேலும் அதை வளர்க்க நினைக்கிறார்கள். அதனால், நாம் அங்கிருந்து கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
கஜினி மாதிரி இருக்கும்
சிக்கந்தர் படம் சல்மானின் முந்தைய படத்திலிருந்து வித்தியாசமாக இருக்கும். இதில் கஜினி படத்திலிருப்பதுபோல சில தனித்துவமான புள்ளிகள் இருக்கின்றன.
கஜினியின் அழகான காதல் கதை இருக்கும். அதேபோல் இந்தப் படத்திலும் கணவன், மனைவி காட்சிகள் இருக்கின்றன.
தற்காலத்தில் பலரும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில்லை. அது அவர்களது அப்பா, அம்மா, அல்லது நண்பர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நாம் வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறோம். இது கமர்சியல் படமாக இருந்தாலும் அழகான கருத்து இருக்கிறது.
ரீமேக் செய்ய மறுத்தேன்
ஹாலிடே என்ற படத்தின் படப்பிடிப்பின்போது சல்மான் கானைச் சந்தித்தேன். அவரிடம் சென்று, ‘உங்களை இயக்க வேண்டும்’ என்றேன். அவரும் ’நானும் உங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.
பின்னர், ஒரு கொரியன் படத்தை ரீமேக் செய்யலாம் என்றார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். நானே கதை எழுதி வருகிறேன். அதை இயக்குகிறேன் என்றேன்.
பின்னர் தயாரிப்பாளர் நதியாத்வாலாவுடன் பேசி படம் முடிவானது. பின்னர் சில மாதம் கதையை விரித்து சல்மான் கானிடம் கூறினேன்.
30 நிமிடத்தில் கதை கேட்டபிறகு அவர் சிகரெட் பிடிக்க சென்றார். பின்னர், என்னுடைய வேலைசெய்யும் பாணி தெரியுமா என்றார். இல்லை என்றேன். அதற்கு, ’மதியம் 2 மணியிலிருந்து காலை 2 மணிவரை’ என்றார்.
சிக்கந்தர் படத்துக்கு 2 கிளைமாக்ஸ்
கிளைமாக்ஸ் முடிவுக்கு வரமுடியாததால் இரண்டு வகையிலும் படப்பிடிப்பை முடித்தோம். எடிட்டிங்கில் முடிவு எய்து கொள்ளலாம் என்றார்.
முதலில் மதராஸி படத்தினை முடிக்க திட்டமிட்டிருந்தேன். சென்னை, மும்பை என மாறிமாறி படப்பிடிப்பை நடத்தினேன்.
சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு 20 நாள்கள் மீதமிருந்த நிலையில் சிக்கந்தர் படத்தினை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் மதராஸி தயாரிப்பாளரிடம் பேசி சம்மதிக்க வைத்தேன் என்றார்.