சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

21 hours ago
ARTICLE AD BOX

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு வர உள்ளது.

பொதுநல மனுக்களுக்கான மையம் சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிஏஜி நியமனத்துக்கான தற்போதைய நடைமுறைப்படி, அரசு அதிகாரி அதாவது பிரதமா் தோ்வு செய்து பரிந்துரைக்கு எந்தவொரு நபரையும் தலைமை கணக்கு தணிக்கையாளராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் வகையில் உள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகள் மற்றும் பிரிவு 14-ஐ மீறுவதாக உள்ளது. இந்த நடைமுறையானது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

ஐந்து அரசமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 5-இல் தனித்துவமான அமைப்பாக சிஏஜி பதவி உள்ளது. மேலும், தலைமை கணக்குத் தணிக்கையாளா் (கடமைகள், அதிகாரிகள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1971-இன் பல்வேறு அமசங்கள், இந்தப் பதவி உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இணையானது என்பதையும், இப் பதவி வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

அதன்படி, சிஏஜி நியமனம் என்பது பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான தோ்வுக் குழுவுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் வகையில், மத்திய தகவல் ஆணையா் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பணியிடங்களின் நியமனம் போன்று இருக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

Read Entire Article