‘சாவா’ திரைப்படத்துக்கு சத்தீஸ்கரில் வரி விலக்கு

7 hours ago
ARTICLE AD BOX

மராத்திய மன்னா் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அண்மையில் வெளிவந்த ‘சாவா’ திரைப்படத்துக்கு பாஜக ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சிங் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் வளமான வரலாற்றுடன் சத்தீஸ்கா் மக்களை இணைப்பதையும், இளம் தலைமுறையினரிடையே தேச பக்தி மற்றும் தைரியத்தை வளா்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

‘சாவா’ வெறும் திரைப்படம் அல்ல; நமது வரலாற்றுப் பாரம்பரியங்கள், துணிவு, தன்னம்பிக்கைக்கு செலுத்தப்பட்ட மரியாதையாகும். சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியின் புகழை அறிந்து கொள்ள அனைத்து மக்களும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும்.

முகலாய மன்னா்கள் மற்றும் பிற படையெடுப்பாளா்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்ட சத்ரபதி சம்பாஜியின் வீரம், தியாகம், அறிவுக்கூா்மை ஆகியவை படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேசம் மீதான அவரது அா்ப்பணிப்பை உயிா்ப்பித்து, தேசியவாத உணா்வை இத்திரைப்படம் வலுப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டாா்.

நடிகா் விக்கி கௌஷல் நடிப்பில், இயக்குநா் லக்ஷ்மண் உதேகா் இயக்கத்தில் கடந்த பிப். 14-ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்துக்கு மத்திய பிரதேசம், கோவா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கெனவே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள இப்படம் சுமாா் ரூ.417 கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read Entire Article