ARTICLE AD BOX
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ச்சியாக 4 இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளது மிகப்பெரிய விசயம்.
இந்திய அணி மற்றுமொரு மிகப்பெரிய ஐ.சி.சி. தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.