ARTICLE AD BOX
8 அணிகள் கலந்துகொண்ட சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. துபாயில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) அதிகாரியை மேடைக்கு அழைக்க ஐசிசி தவறியது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. மறுபுறம், சாம்பியன்ஸ் டிராபியை நடத்தியதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு 85 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.869 கோடி) மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதாக் கூறப்படுகிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த தொடரை நடத்தியது அவ்வணிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், அந்த அணி இந்தப் போட்டியில் அவர்கள் சொந்த மண்ணில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினர். லாகூரில் நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது, பின்னர் துபாய் சென்று இந்தியாவை எதிர்கொண்டது. அதிலும் தோல்வி. அடுத்து, பங்களாதேஷுக்கு எதிரான அவர்களின் மூன்றாவது மற்றும் இறுதி லீக் போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்டது. நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தோல்விகளால், பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது, எனவே ஒரே ஒரு சொந்த போட்டியுடன் தனது தொடரை முடித்துக்கொண்டது. இதனால் அந்த அணி பெருத்த விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபியை நடத்தியதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ரூ.869 கோடியை இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபிக்காக தனது நாட்டில் உள்ள ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மைதானங்களை மேம்படுத்த டாலர் 58 மில்லியன் செலவு செய்துள்ளது. இது, எதிர்பார்த்த பட்ஜெட்டைவிட 50 சதவீதம் அதிகமாகும். பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நிகழ்வு தயாரிப்புகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்கள் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப்களைப் பொறுத்தவரை, வருவாய் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது.
எனவே, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்தியதன் மூலம் பிசிபி சுமார் 85 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து வரும் காலங்களில் தேசிய டி20 சாம்பியன்ஷிப்பிற்கான போட்டி கட்டணத்தை 90 சதவீதம் குறைக்கவும், வீரர்களுக்கான ஊதியம் 87.5 சதவீதம் குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது, போட்டி ஒன்றில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில். தற்போது, அது 10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இனிமேல் , வீரர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மாட்டார்கள். இப்படியாக, நஷ்டத்தை சரிக்கட்ட பலகட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. ஆனால், இந்த முடிவை நிராகரித்து, மறுபரிசீலனை செய்ய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடி இருந்தால், இந்த நஷ்டத்தை அந்த நாடு அடைந்திருக்காது என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய விளையாடிய போட்டிகள் துபாயில் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.