ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடிய போட்டியில் மைதானம் காலியாக இருந்தது விமர்சனத்தை சந்தித்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றாலும், இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானில் நடந்த முதல் போட்டியில் மைதானம் காலியாக இருந்த நிலையில், துபாயில் நடந்த இந்தியா - வங்கதேசம் போட்டியிலும் மைதானம் காலியாக காட்சி அளித்தது.

இந்தத் தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் நடந்தது. அப்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியின் போதும் ரசிகர்கள் பெருமளவில் வரவில்லை. அதை வைத்து பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் நடத்துவது சரியல்ல என்ற விமர்சனம் எழுந்தது.
தற்போது துபாயில் நடைபெற்ற போட்டிக்கும் ரசிகர்கள் நேரில் வரவில்லை. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இந்தப் போட்டிக்கு டிக்கெட் முற்றிலுமாக விற்று விட்டதாக முதலில் சொல்லப்பட்டது. துபாய் சர்வதேச மைதானத்தில் 25 ஆயிரம் இருக்கைகள் இருக்கின்றன. அத்தனை டிக்கெட்டுகளும் விற்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், மைதானத்தில் பாதி அளவு கூட ரசிகர்கள் நேரில் வரவில்லை.
IND vs BAN: "ஹாட்ரிக் எடுத்து விட்டதாக நினைத்தேன்" ரோஹித் செயலால் மனம் நொந்து போன அக்சர் பட்டேல்
இது ஒரு புறம் இருக்க, ரசிகர்கள் பலரும் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்க மக்கள் விரும்பவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அத்தனை டிக்கெட்டுகளையும் வாங்கியது பிளாக் டிக்கெட் விற்கும் நபர்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆன்லைனில் விற்கப்படும் பிளாக் டிக்கெட்டை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இல்லை என்பதுதான் காரணமா? என்ற கோணமும் இதில் உள்ளது.
எப்படி இருந்தாலும் மக்கள் வராமல் இந்தத் தொடர் நடத்தப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையிலேயே மக்களுக்கு ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பது விருப்பம் இல்லையா? அல்லது இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் மட்டும்தான் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் இருக்கிறார்களா? என்ற விவாதமும் எழுந்துள்ளன.
ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளை இனி நடத்தக்கூடாது என்ற கருத்து சில முன்னாள் வீரர்கள் மத்தியில் உள்ளது. தற்போது உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற சர்வதேச தொடர்களில் மட்டுமே ஒரு நாள் போட்டிகளில் சில அணிகள் ஆடி வருகின்றன. இந்திய அணி கடந்த ஆண்டு மொத்தமே மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டும்தான் விளையாடியது. அந்த வகையில் ஒரு நாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய ஒருநாள் தொடர்களில் கூட ரசிகர்கள் மைதானத்திற்கு வராமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.