ARTICLE AD BOX
பெங்களூர்: மகளிர் ஐபிஎல் எனப்படும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி தங்களது சொந்த ஊரான பெங்களூரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவரில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி இருக்கிறது. பெங்களூருவில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற உபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தானா 6 ரன்களில் ஆட்டம் இழக்க டேனி வியாட் 41 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஆர் சி பி அணியின் நட்சத்திர வீராங்கனை ஆன ஆஸ்திரேலியாவை சேர்ந்த எல்லிஸி பெர்ரி 56 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார்.
இதில் ஒன்பது பௌண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி அணியும் தடுமாறியது. தொடக்க வீராங்கனை கிரண் 24 ரன்களிலும் தினேஷ் விருந்தா 14 ரன்களிலும் கேப்டன் தீப்தி சர்மா 25 ரன்களிலும் தகிலா மெக்ராத் டக் அவுட்டாகியும் இருந்தனர்.
இந்த சூழ்நிலையில் ஸ்வேதா சேராவத் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் சோபி எஸ்சல்ஸ்டோன் 19 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் உள்பட 33 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் உபி அணியில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது எஸ்சில்ஸ்டோன் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி எடுத்தார்.
இதனால் உபி வெற்றிக்கு கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தான் தேவைப்பட்டது. அப்போது எஸ்சல்ஸ்டோன் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் ஓடினார். கடைசி பந்தில் ஒரு ரன் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், உபி அணி தங்களது விக்கெட்டை இழந்ததால் போட்டி சமனில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் களம் இறங்கிய உபி அணி சூப்பர் ஓவரின் ஒரு விக்கெட் இழப்பிற்கு எட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி சூப்பர் ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.