ARTICLE AD BOX
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 3வது போட்டியில் குருப் பி பிர்வில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஓப்பனிங்கில் களமிறங்கிய டோனி ஜி ஜோர்ஜி, ரியான் ரிக்கல்டன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஸ்கோர் 28 ஆக உயர்ந்த நிலையில், டோனி ஜி ஜோர்ஜி 11 ரன்னில் முகமது நபி பந்தில் கேட்ச் ஆனார். பின்பு களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா ரியான் ரிக்கல்டனுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினார். ஒருபக்கம் பவுமா நிதானம் காட்ட, மறுபக்கம் ரியான் ரிக்கல்டன் சிறப்பான ஷாட்களை விளையாடி பவுண்டரிகளை ஓட விட்டார்.
சிறப்பாக விளையாடிய பவுமா அரை சதம் (76 பந்தில் 58) அடித்து அவுட் ஆனார். மறுமுனையில் சூப்பராக விளையாடிய ரியான் ரிக்கல்டன் ஓடிஐ கிரிக்கெட்டில் தனது முதலாவது சதம் அடித்து அசத்தினார். 106 பந்தில் 103 ரன்கள் அடித்த அவர் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 201/3 என்ற நிலையில் இருந்தது. பின்பு ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்கரம் (36 பந்தில் 52 ரன்), ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (46 பந்தில் 52 ரன்) அதிரடி அரைசதம் விளாசி அணி 300 ரன்கள் கடக்க உதவினார்கள்.
தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட் வீழ்த்தினார். 316 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க வீரர்ர்களின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஸ்டார் வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் (10), இப்ராஹிம் சத்ரான் (17), செடிக்குல்லாஹ் அடல் (16) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய மறுபக்கம் ரஹ்மத் ஷா பொறுப்புடன் விளையாடினார். ஆனால் எதிர்பக்கம் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி (0), அஸ்மதுல்லா உமர்சாய் (18) என எவரிடம் இருந்தும் சப்போர்ட் கிடைக்கவில்லை. விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்தன. தனி ஆளாக போராடிய ரஹ்மத் ஷா (92 பந்தில் 90 ரன்) கடைசியாக அவுட் ஆனார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கும், பீல்டிங்கும் படுமோசமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் கசிகோ ரபடா 3 விக்கெட்களும், லுங்கி இங்கிடி, வியான் முல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். கன்னி சதம் விளாசிய ரியான் ரிக்கல்டன் ஆட்டநாயகன் விருது வென்றார்.