ARTICLE AD BOX
2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் டாமினேட் செய்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது.
இந்நிலையில், 2017 தோல்விக்கு பழிதீர்க்கும் ஒரு போட்டியில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் வென்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய ரசிகர்கள் இருந்தார்களோ இல்லையோ, கிங் கோலி நிச்சயமாக இருந்தார் என்றால் மிகையாகாது.
போட்டிக்கு முன்னதாக மற்றவீரர்களை விட நீண்டநேரம் நெட்ஸில் பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி, பயிற்சிக்கு பிறகும் சகவீரர்களுடன் நீண்டநேரம் ஆலோசனை வழங்கியதை நம்மால் பார்க்க முடிந்தது.
இந்த சூழலில், துபாயில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விரட்டி அச்சுறுத்தினார். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் பாகிஸ்தான் விளையாட, எப்போதும் பார்ட்னர்ஷிப்களை பிரிக்கக்கூடிய பவுலரான ஹர்திக் பாண்டியா, ஒரு சிறந்த பந்தை வீசி பாபர் அசாமை 23 ரன்னில் வெளியேற்றினார். உடன் மற்றொரு தொடக்க வீரரான இமாமும் ரன் அவுட்டில் வெளியேற, குறைவான நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.
ஆனால், 3வது விக்கெட்டுக்கு கைகோர்த்த சவுத் ஷக்கீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.
எப்படியும் 280 ரன்களை பாகிஸ்தான் எட்டும் என்ற நிலை இருந்தபோது, அதுவரை நிதானமாக விளையாடிய இருவரும் நிதானத்தை இழந்து அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட குல்தீப் யாதவ் 2 பந்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, பாகிஸ்தானை மொத்தமாக பேக்ஃபுட்டில் தள்ளினார்.
அடுத்த வந்த ஒரு வீரர் கூட சோபிக்காததால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட ரோகித் சர்மா 20 ரன்னில் வெளியேற, சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்து 46 ரன்னில் வெளியேறினார்.
அதற்குபிறகு கைகோர்த்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்த, பாகிஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ் 56 ரன்னில் அவுட்டாக, இறுதிவரை நிலைத்துநின்று ஆடிய கிங் கோலி 7 பவுண்டரிகளுடன் தன்னுடைய 51வது ஒருநாள் சதமடித்து அசத்தினார். பாகிஸ்தான் என்றாலே வெளுத்துவாங்கும் கோலி, மோசமான ஃபார்மில் இருந்து மீண்டுவந்ததோடு அதிவேகமாக 14,000 ODI ரன்களை கடந்து புதிய உலகசாதனை படைத்தார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு ஃபார்மேட்டில் அதிக சதங்கள் அடித்திருந்த சச்சின் சாதனையை சமன்செய்து அசத்தினார் கோலி. டெஸ்ட்டில் அதிகபட்சமாக 51 சதங்களை சச்சின் அடித்திருந்த நிலையில், ஒருநாள் ஃபார்மேட்டில் 51 சதங்களை அடித்து சமன்செய்துள்ளார் கோலி. 82வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்த கிங் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது இந்தியா!