ARTICLE AD BOX
தவெகவின் இரண்டாமாண்டு தொடக்க விழா நிகழ்வு பூஞ்சேரியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்து அரசியல் வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார் விஜய். இந்த விழாவின் ஹைலைட்டான விஷயங்கள் இங்கே.

பூஞ்சேரியின் தனியார் விடுதியிலுள்ள ஹாலில் 2000-2500 பேர் மட்டும்தான் அமர முடியும். கட்சிரீதியாக 120 மாவட்டங்கள் இருக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு 20 நிர்வாகிகளை மட்டுமே அழைத்து வருமாறு மா.செக்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கேற்பதான் பாஸ்களும் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள் தங்களுடன் கூடுதலான தொண்டர்களை அழைத்து வந்துவிட்டார்கள். ஓரளவுக்குதான் பவுன்சர்களாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. கூடுதல் சேர்களை போட்டு 3000 பேர் வரைக்கும் அமரும் வகையில் நெருக்கிப் பிடித்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் ஆனந்த். அதுவும் போதாமல் பல நிர்வாகிகளும் நின்றபடியே நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
திரைமறைவு கூட்டுக்களவாணிகள்
காலை 10 மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கும் என பத்திரிகைகளுக்கு முன்னதே செய்தி சொல்லப்பட்டிருந்தது. சொன்னதைப் போலவே 10:05 மணிக்கு பிரஷாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் ஆகியோருடன் விஜய் மேடையேறிவிட்டார். மேடையில் விஜய்யும் பிரஷாந்த் கிஷோரும் கைகோத்து நிற்க தொண்டர்கள் மத்தியில் கரகோஷம் அள்ளியது. முதல் வேலையாக மேடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த GetOut பேனரில் விஜய் கையெழுத்திட்டார். திரைமறைவு கூட்டுக்களவாணிகள் என திமுகவையும் பாஜகவையும் லிங்க் செய்து சாடும் வசனங்கள் நிறையவே அந்த பேனரில் இடம்பெற்றிருந்தது.

கூடவே மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் சில அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. மேடையிலிருந்து இறங்கி வந்த விஜய் சில நொடிகள் அந்த பேனரை உன்னிப்பாக பார்த்துவிட்டு கையெழுத்திட்டார். இதை முடித்துவிட்டு அத்தனை பேரும் மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் அமர்ந்துவிட்டார்கள்.
முரண்பாடுகள்
கிடாக்குழி மாரியம்மாளின் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 'விஜய் தம்பியை இதுவரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அற்புதமான தலைவரை, அழகான தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.' என விஜய்யை குளிர்விக்கும் வகையில் பேசி, 'தலைவர் விஜய் வாழ்க, தமிழக வெற்றிக்கழகம் வளர்க' என பாட நிர்வாகிகளும் குஷியாகிவிட்டார்கள்.
கிடாக்குழி மாரியம்மாளின் பாடலை கேட்டு ஜோராக இருந்த நிர்வாகிகள், அடுத்ததாக ஒளிபரப்பப்பட்ட ஒரு AV யை பார்த்து டயர்ட் ஆகிவிட்டனர். விஜய் நோட்டு புத்தகம் கொடுத்ததில் தொடங்கி மாநாடு நடத்தியது வரை ஒன்றுவிடாமல் கட்சியின் கொ.ப.செ ராஜ் மோகன் அந்த AV இல் ஒப்பித்திருந்தார். ஆரம்பத்தில் விசிலடித்து ஆர்ப்பரித்த நிர்வாகிகள் போகப்போக டயர்ட் ஆகி அமைதியாகிவிட்டனர். ராஜ் மோகன் பேசுவது பிரஷாந்த் கிஷோருக்கு புரிய வேண்டுமென சப் டைட்டில் போட்டதுதான் ஹைலைட்.

கட்சிக்குள் ஜான் ஆரோக்கியசாமிக்கும் ஆனந்துக்கும் முரண்பாடுகள் இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆதவ் அர்ஜூனா இணைந்தவுடன் இந்த பேச்சு இன்னும் வலுவடைந்தது. ஆனந்துக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் குறைவதாகவும் பேசப்பட்டது. அப்படியெல்லாம் இல்லை என்பதை வெளியே காட்ட நினைத்தே ஆதவ் தரப்பும் ஆனந்த் தரப்பும் கூடவே ஜான் ஆரோக்கியசாமியும் என மூவரும் இணைந்தே இந்த நிகழ்வுக்கான வேலைகளை பார்த்திருக்கின்றனர். நிகழ்வுக்கு முந்தைய நாள் பின்னிரவில் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட போதும் மூவருமே ஸ்பாட்டில் இருந்தனர். நிகழ்ச்சிக்கு முன்பும் ஆதவ் டீமை சேர்ந்தவர்களையும் ஆனந்த் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

கட்சிக்குள் எந்த முரண்பாடும் இல்லை. புதிதாக வந்தவர்களுக்கு சிறப்பு கவனிப்பெல்லாம் இல்லை என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே ஏற்பாடுகளை செய்திருந்தனர். #GetOut பேனரில் விஜய் கையெழுத்திட்டவுடன் அடுத்ததாக ஆனந்த்தான் கையெழுத்திட்டார். அதேமாதிரி, மேடைக்கு கீழே முதல் வரிசையில் அனைவரும் அமர்ந்திருந்த போதும் விஜய்க்கு அருகே ஆனந்த்தான் அமர்ந்திருந்தார். ஆனந்துக்கு அடுத்துதான் பிரஷாந்த் கிஷோர் அமர்ந்திருந்தார். ஆதவ் இடதுபக்கத்தில் ஓரமாக அமர்ந்திருந்தார். அதேமாதிரி, அனைத்து மா.செக்களையும் மேடை ஏற்றியிருந்தார்கள். மேடையிலும் ஆதவ் இடது ஓரத்தில் கடைசிக்கு முந்தைய இருக்கையிலும் சி.டி.ஆர் வலது ஓரத்தில் கடைசிக்கு முந்தைய இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். மிகக் கவனமாகவே இந்த இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஒரு கூட்டு கிளியாக!
விஜய்க்கு இடதுபக்கமாக பிரஷாந்த் கிஷோர் அமர்ந்திருக்க, மாநாட்டில் விஜய்யோடு மேடையை பகிர்ந்துகொண்ட நிர்வாகிகளுக்குதான் இங்கேயும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், ஆனந்த்தின் ஆதரவாளர்களாக இருக்கும் முக்கிய நிர்வாகிகள் செம ஹேப்பி. அதேமாதிரி, ஆதவ் அர்ஜூனா பேசும்போது ஜான் ஆரோக்கியசாமியையும் ஆனந்தையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். 'கட்சியின் வியூக வகுப்பாளரும் என்னுடைய நண்பருமான ஜான் ஆரோக்கியசாமி..' என அவரை குறிப்பிட்டவர், 'ஆனந்த் அண்ணன் காலை 4 மணி வரை இங்கே இருந்துதான் பணிகளை செய்து வந்தார். 4 மணிக்கு கிளம்பிவிட்டு 6 மணிக்கு மீண்டும் வந்துவிட்டார். அந்தளவுக்கு கடினமாக உழைக்கிறார்.' என பாசமழை பொழிந்தார். ஒரு கூட்டு கிளியாக!
TVK: 'ஏளனம் பேசுவதை நிப்பாட்டுங்கள்...இது மன்னராட்சி கிடையாது..!' - ஆதவ் அர்ஜுனா காட்டம்அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு தவெக தயாராக இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், அப்படியெதுவும் இல்லை. தனியாகத்தான் நிற்கப்போகிறோம் என்பதையும் முக்கிய செய்தியாக சொல்லியிருந்தனர். '40-45 எம்.எல்.ஏ சீட்டு வாங்குவதற்காக நாங்கள் வரவில்லை. ஆட்சியை பிடிக்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கான திட்டமெல்லாம் எங்களிடம் தயாராக இருக்கிறது.' என ஒரே போடாக போட்டார். பிரஷாந்த் கிஷோர் பேசும்போதும் தவெகவை நம்பிக்கைக்குரிய மாற்றுசக்தியாக பார்ப்பதாகவும் அதனால்தான் விஜய்யுடன் இணைந்திருப்பதாகவும் பேசினார்.

விஜய்யுமே பேச்சை ஆரம்பிக்கும்போதே, 'தவெக தமிழகத்தில் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.' என்றே பேசினார். அதிமுகவுடன் கூட்டணி என பேசினீர்களே, அதெல்லாம் இல்லை என்பதற்குதான் இந்த மெசேஜ்கள் என்கின்றனர் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

விஜய், பிரஷாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா என மூவருமே தவெக நிர்வாகிகளிடையே திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்தும் வகையிலேயே பேசியிருந்தனர். 'மும்மொழிக்கொள்கையை வைத்து டிவிட்டரில் டேக் ஓட்டி பள்ளிக் குழந்தைகளை போல பாசிசமும் பாயாசமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்திலிருக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்ற வேண்டும்.' என விஜய் நக்கலாக பாஜகவோடு திமுகவையும் வம்புக்கிழுத்தார். 'கடன் வாங்கி ஊழல் செய்கிறார்கள். எங்கள் தலைவரை நடிகர் எனக் கூறிவிட்டு எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை போட்டு நடிக்கிறார்கள்.' என ஆதவ்வும் தன் பங்குக்கு திமுக மீது பாய்ந்தார். 'வாரிசு அரசியலை நீங்கள் அவ்வளவு சீரியசாக நினைக்கவில்லை. ஆனால், யோசித்துப் பாருங்கள். கபில்தேவ், கவாஸ்கர் போன்றோரின் மகன்கள் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டுமெனில் சச்சினும் தோனியும் கிரிக்கெட் ஆடியிருக்க முடியுமா?' என உதயநிதியை அட்டாக் செய்திருந்தார்.
TVK Vijay: 2ம் ஆண்டு தொடக்க விழா `மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்?' - வெளியான தகவல்Booth Level Agency
கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பேசுகையில் Booth Level Agency என்பதைப் பற்றி பேசியிருந்தார். பூத் கமிட்டி மாநாடை நடத்தி பெரிய கட்சிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டப்போவதாகவும் கூறியிருக்கிறார். விழாவுக்கு வந்திருந்த முக்கியமான மா.செகள்ளிடம் இதுசம்பந்தமாக விசாரிக்கையில், 'முதலில் பூத்துக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்கிறோம். அவர்கள் தங்களுக்கு கீழ் 5-10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இந்த வேலைதான் இப்போது பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70% அளவுக்கு முடித்துவிட்டோம். விரைவிலேயே 100% உறுப்பினர்களை நியமித்து தலைமையிடம் பட்டியலை ஒப்படைப்போம்.'என்கின்றனர்.

தவெக சார்பில் விஜய் நடத்தியிருக்கும் நிகழ்வு மீண்டும் ஒரு முறை தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிகழ்வைப் பற்றி, ஓராண்டை முடித்திருக்கும் தவெகவின் பயணம் குறித்தும் உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
