ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி 2025: 8 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் யுத்தம்.. ஜியோஸ்டார் உடன் 11 ஸ்பான்சர்ஸ்.!!
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தியாக, 2025 ஐ.சி.சி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வருகிறது. 'உலகக் கோப்பை லைட்' என்று அழைக்கப்படும் இந்த 50 ஓவர் போட்டி, உலகின் சிறந்த அணிகளை ஒன்றாக கொண்டு வரும் ஒரு முக்கியத் தொடராகும். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக, இந்தப் போட்டியை ஒளிபரப்புவதற்கும் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் ஜியோஸ்டார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான முக்கிய ஸ்பான்சர்களையும் அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான போட்டிகள் பிப்ரவரி 19 ஆன இன்று தொடங்கி மார்ச் 9 2025 அன்றுடன் முடிவடைகின்றன. உலகின் சிறந்த அணிகள் இதில் பங்கேற்கின்றன. பாகிஸ்தானில் போட்டி நடைபெற்று வருகின்றன.

சாம்பியன்ஸ் டிராபியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் மற்றும் ஸ்ட்ரீமிங் கூட்டணியாக ஜியோஸ்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பை உறுதிப்படுத்துவதோடு, Dream11, Pernod Ricard India, Beam Suntory, Kohler, Birla Opus, Vodafone Idea, ICICI Direct, McEnroe மற்றும் Eicher Motors உள்ளிட்ட 9 முக்கிய நிறுவனங்கள் போட்டிக்கான ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. DD Sports இல் இந்திரா IVF மற்றும் LIC Housing Finance Limited ஆகியவை இணை ஸ்பான்சர்களாக உள்ளன.
ஜியோஸ்டாரின் விளையாட்டுத் துறையின் தலைமை வருவாய் அதிகாரி அனுப் கோவிந்தன் கூறுகையில், இந்த மாபெரும் போட்டியை இந்திய ரசிகர்களுக்கு கொண்டுசெல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும், வலுவான ஸ்பான்சர்களின் ஆதரவுடன், இது ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறந்த பிராண்டுகளின் உற்சாகமான பங்கேற்பு கிரிக்கெட்டின் ஒன்றிணைக்கும் சக்தியை வலுப்படுத்துகிறது. ரசிகர்களுக்கு சிறந்த பார்வை அனுபவத்தையும், எங்கள் கூட்டாளர்களுக்கு அர்த்தமுள்ள மதிப்பையும் வழங்க எதிர்நோக்குகிறோம் என்றும் கூறியுள்ளார்.
2017-ஆம் ஆண்டு பாகிஸ்தானால் வென்ற சாம்பியன்ஸ் டிராபி, அதன் பிறகு நடைபெறவில்லை. ஐ.சி.சி அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக, 2019 மற்றும் 2023 உலகக் கோப்பைகள் மட்டுமே கவனத்திற்கொடுக்கப்பட்டன. ஆனால் 2025-ல் மீண்டும் திரும்பும் இந்த போட்டி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தவறவிட்ட இந்திய அணி, ஒருநாள் போட்டியில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபிக்க முயற்சிக்கிறது.
இந்தியா அணி 2023 உலகக் கோப்பையில் தோல்வியடைந்த பின்னர், இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் உள்ளது.இங்கிலாந்து அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபிக்க விரும்புகிறது, மேலும், தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதியில் தோல்வியடையும் பழக்கத்திலிருந்து வெளிவர முயற்சிக்கிறது மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அணிகள் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும்,இந்த போட்டி, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக, பிராண்டுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மூலம் நேரடி ஒளிபரப்பை உறுதிப்படுத்தி, இந்திய ரசிகர்களுக்கு உலக தரமான ஒளிபரப்பு அனுபவத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது ஒரு மாபெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. அதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 22 ஓவர்கள் முடிவில் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 98 ரன்களுடன் விளையாடி வருகிறது.
நாளை துபாயில் நடைபெறும் 2-வது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன.