ARTICLE AD BOX
ஐசிசியின் அடுத்த மிகப்பெரிய கோப்பையாக பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது இந்தாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி நடக்கவிருக்கிறது. 2023 ஒருநாள் கோப்பையை இறுதிப்போட்டிவரை சென்று கோட்டைவிட்ட இந்திய அணி, 2025 சாம்பியன்ஸ் டிரோபியை குறிவைத்துள்ளது.
ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளுக்கான் பெயரை குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்.
இந்த 2 அணிகள் எப்போதும் போட்டியில் உள்ளன..
இரண்டு உலகக்கோப்பை மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிரோபியை வென்ற கேப்டனான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், 2025 சாம்பியன்ஸ் டிரோபியை வெல்லும் இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளில் தற்போது உள்ள வீரர்களின் தரத்தை பாருங்கள். ஐசிசி தொடர்களில் அவர்களது சமீபத்திய செயல்பாட்டை பாருங்கள். இரண்டு அணிகளும் தவிர்க்க முடியாத அணிகள். அவர்களை வெல்வது கடினம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 3வது அணியாக பாகிஸ்தானை குறிப்பிட்ட அவர், “தற்போது மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வரும் மற்றொரு அணி பாகிஸ்தான். கடந்த சிலகாலமாக அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் மிகச் சிறப்பாக உள்ளது. அதனால் பெரிய போட்டிகளில் அவர்கள் எப்போதும் கணிக்க முடியாத அணியாக இருக்கின்றது. இருப்பினும் அவர்கள் இருக்கும் குறைபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்துவிட்டதாகத் தெரிகிறது" என்று பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா (2002, 2013) மற்றும் ஆஸ்திரேலியா (2006, 2009) தலா இரண்டு முறை சாம்பியன் டிராபி பட்டத்தை வென்ற அணிகளாகவும், பாகிஸ்தான் அணி 2017 சாம்பியன்ஸ் டிரோபியை வென்று நடப்பு சாம்பியன் அணியாகவும் களம்காணவிருக்கின்றன.
அதிகமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியாக இந்தியா திகழ்கிறது. இதுவரை 2000, 2002, 2013, 2017 என நான்குமுறை முன்னேறியிருக்கும் இந்தியா 2002 மற்றும் 2013 கோப்பைகளை வென்றுள்ளது.