ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராஃபி 2025: வெற்றியை நோக்கி நடைபோடுமா இந்திய அணி? வீரர்களுக்கு கூடுதல் சுமையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- 3 நிமிடங்களுக்கு முன்னர்
துபாயில் இன்று பகலிரவாக நடக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரி்ன் 2வது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து களமிறங்குகிறது வங்கதேச அணி.
2018-ம் ஆண்டு இதே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய நிலையில் ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பின் துபாய் சர்வதேச மைதானத்தில் மீண்டும் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

ஜாம்பவான்கள் இல்லாத போட்டி
இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு அணிகளிலும் இரண்டு முக்கிய ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் போட்டியை சந்திக்கின்றன. இந்திய அணியைப் பொருத்தவரை முக்கிய ஆட்டக்காரரான ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலி காரணமாக சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கவில்லை.
இதனால் வேகப்பந்து வீச்சுப் பொறுப்பு முகமது ஷமி தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா இருவரையும் வழிநடத்த வேண்டிய நிலையில் ஷமி இருக்கிறார். ஏற்கெனவே காயத்திலிருந்து மீண்டுவந்துள்ள ஷமிக்கு இந்தத் தொடர் தனது ஃபார்மை நிரூபிக்க உரைகல்லாக இருக்கும்.
அதேபோல, வங்கதேசத்தின் அனுபவ வீரர் சஹிப்உல் ஹசன் இல்லாமல் அந்த அணி பெரிய தொடரை எதிர்கொள்கிறது. 2004-ஆம் ஆண்டிலிருந்து சஹிப்உல் ஹசன் இல்லாமல் வங்கதேசம் பெரிய தொடரைச் சந்திக்காத நிலையில், இப்போது அந்த ஆல்ரவுண்டர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் மெஹதி ஹசன் மிராஜ் அனைத்து சுமைகளையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆறுதல் அளித்த நட்சத்திரங்கள்
இந்திய அணியைப் பொருத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று, இழந்த ஃபார்மை மீட்டு சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தயாராகியுள்ளது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மீது கவலை எழுந்த நிலையில், இந்தத் தொடருக்குப்பின் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த அதிரடி சதம், விராட் கோலி கடைசி போட்டியில் அடித்த அரைசதம் இருவர் மீதான கவலையை சற்றுப் போக்கியுள்ளது. இருவரும் இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நம்பிக்கை தரும் நடுப்பகுதி
இந்திய அணியைப் பொருத்தவரை ஆறுதலான விஷயம் நடுப்பகுதி ஓவர்களை சமாளிக்க பேட்டர்கள் ஃபார்மில் இருப்பதும், நடுவரிசை பேட்டர்கள் ஃபார்மில் இருப்பதும்தான். குறிப்பாக விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா என நடுவரிசை, கீழ்வரிசை வரை வலுவான பேட்டர்கள் இருப்பது பேட்டிங் மீதான அச்சத்தைப் போக்கியுள்ளது.
அதிலும் ஷ்ரேயாஸ் அய்யர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மார்க் உட் 150 கி.மீ வேகத்தில் வீசிய பந்தை ஆஃப் திசையிலும், ஹூக் ஷாட்டில் ரசிகர்கள் பக்கமும் அடித்தபோதே ஷ்ரேயாஸ் அய்யர் சாம்பியன்ஸ் டிராஃபியில் எப்படி விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதலால், ஷ்ரேயாஸ் அய்யரின் ஃபார்ம் நிச்சயமாக வங்கதேச அணிக்கு பெரும் சவாலாக அமையும். அதேபோல, அக்ஸர் படேல் இங்கிலாந்து தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலித்து அரைசதம் அடித்தது, கீழ்வரிசை பேட்டிங் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கோலி, கில் மீது எதிர்பார்ப்பு
சுப்மான் கில்லின் ஃபார்ம் நன்றாக இருக்கிறது, கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 1,900 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருப்பது பலமாகும்.
சுப்மான் கில் களத்தில் நின்றுவிட்டால் குறைந்தபட்சம் அரைசதம் வருவது உறுதி, எதிரணி வாய்ப்பைத் தவறவிட்டால் சதத்துக்கு உத்தரவாதம் அளித்துவிடுவார் கில். ஆதலால் கில் ஆட்டம் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருக்கும்.
விராட் கோலி இந்தத் தொடரில் 37 ரன்களை எடுத்துவிட்டாலே ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸில் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்து, சச்சின், சங்கக்கார சாதனையை முறியடிப்பார். கோலி ஆகச்சிறந்த பேட்டர் என்றபோதிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து டெஸ்ட், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய விதம் கவலையை ஏற்படுத்தியது.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் அரைசதம் அடித்தபின் கோலி மீதான கவலை குறைந்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்தவராக கோலி 910 ரன்களுடன் முன்னணியில் இருக்கிறார், 5 சதங்கள், 3 அரைசதங்கள் என 75 சராசரியும் கோலி வைத்திருப்பதால், இந்த ஆட்டத்திலும் கோலியின் அற்புதமான ஆட்டம் தொடரும் என நம்பலாம்.

பட மூலாதாரம், Getty Images
சுழற்பந்துவீச்சு ஆயுதம்
இந்தத் தொடரில் இந்திய அணி வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சைத்தான் நம்பி களமிறங்குகிறது. ஏனென்றால் அணியில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்டத்திலும் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சு வங்கதேசத்துக்கு பெரிய தலைவலியாக மாறும்.
வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா முதலிடத்தில் இருப்பதால் ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, வங்கதேச பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கும்.
அடுத்ததாக குல்தீப் யாதவ் நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் இழுப்பதில் வல்லவர். தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை வீழ்த்துவதும், ரன்ரேட்டை இழுத்துப் பிடிப்பதிலும் குல்தீப் அருமையாக செயல்படுவார்.
2017--ஆம் ஆண்டு குல்தீப் அறிமுகமாகியபின், ஒருநாள் போட்டிகளில் நடுப்பகுதி ஓவர்களில் இவரின் பங்களிப்பு வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது, நடுப்பகுதி ஓவர்களை வீசி 139 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தியுள்ளார்.
- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தும் காட்சி வெளியீடு9 மணி நேரங்களுக்கு முன்னர்
ஷமி மீது கூடுதல் சுமை
துபாய் ஆடுகளத்தில் புதிய பந்தில் பும்ரா விக்கெட் வீழ்த்துவதுபோல் முகமது ஷமி, அர்ஷ்தீப் இருவரும் விக்கெட் வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளனர். 'பும்ரா இருந்திருந்தால்..' என்ற வார்த்தையின் வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய நிலையில் இருவரும் உள்ளனர். தொடக்கத்திலேயே இருவரும் விக்கெட் வீழ்த்திக் கொடுத்தால் நடுப்பகுதியில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களுக்கு சுமை குறைந்து இன்னும் சுதந்திரமாக பந்துவீசுவார்கள்.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங், நடுப்பகுதி பந்துவீச்சு வலுவாக இருப்பது நம்பிக்கையளிக்கிறது. வெற்றியை நோக்கி நடைபோடும் என்ற நம்பிக்கையை ரசிகர்களின் ஆழ்மனதில் இரு அம்சங்களும் விதையாக விழுந்துவிட்டன.

பட மூலாதாரம், Getty Images
ஜாம்பவான்கள் இல்லாதது பலவீனம்
வங்கதேசத்தைப் பொருத்தவரை அந்த அணியில் அனுபவ வீரர்கள் சஹிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் இல்லாதது பெரிய பின்னடைவு. பெரும்பாலும் வங்கதேச டி20 லீக் தொடரில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களே அணியில் நிறைந்துள்ளனர்.
அனுபவ வீரர்கள் என்றெடுத்தால் முஸ்பிகுர் ரஹிம், மெகமதுல்லா, முஸ்தஃபிசுர் ரஹ்மான், சவுமியா சர்க்கார், மெஹதி ஹசன் மராஜ் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
வங்கதேச அணி கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் கடைசியாக ஒருநாள் தொடரில் விளையாடியது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வங்கதேச அணி ஒரு ஒருநாள் தொடரை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
கடைசியாக, கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக ஆடிய ஒருநாள் தொடரிலும் 3-0 என்று வங்கதேசம் பறிகொடுத்தது. அதன்பின், ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாடவில்லை.
கடந்த 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து வங்கதேசம் வெளியேறியது. அதனால், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்க இந்தப் போட்டியை பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் நம்பிக்கை தரவில்லை.
ஏனென்றால், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை முடிந்தபின் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வங்கதேசம் அணி நடுப்பகுதி ஓவர்களில் 4.93 ரன்ரேட்டில்தான் விளையாடியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்றுள்ள 8 அணிகளில் வங்கதேசத்தின் சராசரிதான் மோசமானதாகும். ஆதலால், நடுவரிசை, நடுப்பகுதி ஓவர்கள் ஆகிய இரண்டுமே வங்கதேச அணிக்கு பெரிய சோதனையாக இருக்கும்.
வங்கதேச அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான், நாஹித் ராணா இருவரும் இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டர்கள் சுப்மான் கில், ரோஹித் சர்மாவுக்கு அச்சறுத்தலாக இருக்கலாம்.
அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு திணறுவார், பலமுறை ஆட்டமிழந்துள்ளார் என்பதால், முஸ்தஃபிசுர் ரஹ்மான் வங்கதேச அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார். அதிலும், முஸ்தஃபிசுர் ரஹ்மானின் ஸ்லோ பால், பந்துவீச்சில் வேரியேஷன் ஆகியவை நிச்சயம் டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இதுவரை எப்படி?
கடந்த 1988-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரிலிருந்து இந்தியா-வங்கதேசம் அணிகள் கிரிக்கெட் விளையாடி வருகின்றன. இதுவரை 41 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ள நிலையில், இந்திய அணி 32 வெற்றிகளைப் பெற்றுள்ளது, வங்கதேசம் அணி 8 முறை வென்றுள்ளது.
கடந்த 37 ஆண்டுகளில் ஒரே முறைதான் இந்தியா-வங்கதேசம் அணிகள் சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாடியுள்ளன. இதில் கடந்த 2017--ஆம் ஆண்டு அரையிறுதியில் இரு அணிகளும் மோதியதில் வங்தேச அணியை வீழ்த்தியது கோலி தலைமையிலான இந்திய அணி.
- 'மீண்டும் வங்கதேசம் திரும்புவேன்' - ஷேக் ஹசீனா பேச்சுக்கு வங்கதேச அரசு எதிர்ப்பு9 மணி நேரங்களுக்கு முன்னர்
துபாய் ஆடுகளம் எப்படி?
துபாய் ஆடுகளத்தில் கடைசியாக கடந்த 2024, மார்ச் மாதத்தில் ஸ்காட்லாந்து, கனடா அணிகள் விளையாடின. அதன்பின் ஒரு ஒருநாள் போட்டிகூட நடக்கவில்லை. இதுவரை 58 ஒருநாள் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடந்திருந்தாலும், 4 போட்டிகளில்தான் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது.
துபாய் மைதானத்தில் பிட்ச் வறண்ட தன்மை உடையது. இங்கு பெரிதாக ஸ்கோர் செய்வது கடினம். சாம்பியன்ஸ் டிராஃபிக்காக இந்த மைதானத்தில் 20 யார்ட் வட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால், தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், நடுப்பகுதியில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இரு அணிகளும் சுழற்பந்துவீச்சை எவ்வாறு கையாளப் போகின்றன என்பதைப் பொருத்து ஆட்டத்தின் முடிவு இருக்கும்.
இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடிப்பது சாதகமானது. ஏனென்றால் இரண்டாவதாக பந்துவீசும் அணி குளிர்ந்த காற்று, ஈரப்பதம், பனிப்பொழிவை சந்திக்கநேரும் என்பதால் பந்துவீச சிரமப்படும்.
வங்கதேசம்(உத்தேச அணி)
தன்சித் ஹசன், சவுமியா சர்க்கார், நஜ்முல் ஹூசைன் சான்டோ(கேப்டன்), தவுஹித் ஹிர்தாய், முஸ்ஃபிகுர் ரஹிம், மெகமதுல்லா, மெஹதி ஹசன் மிராஜ், ரிசாஹத் ஹூசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசுர் ரஹ்மான்
இந்திய அணி (உத்தேசப் பட்டியல்)
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மான் கில், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)