சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

4 days ago
ARTICLE AD BOX

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்காள தேச அணியை இன்று துபாயில் சந்திக்க உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி போட்டியை வெற்றியோடு தொடங்கும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு சதம் அடித்தார். கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியது பலவீனமே. இருப்பினும் முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, சுழலில் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி மிரட்ட காத்திருக்கிறார்கள். துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரு அணி மொத்தமே 3 லீக்கில் தான் விளையாட வேண்டும். ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காளதேச அணியை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் (0-3) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை (1-2) அடுத்தடுத்து இழந்தது. விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசிய சர்ச்சையில் சிக்கிய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் அணியில் இடம் பெறவில்லை. இதே போல் ரன் எடுக்க தடுமாறும் அனுபவ வீரர் லிட்டான் தாசும் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிநபராக ஆட்டத்தில் வெற்றி தேடித்தரக்கூடிய திறமை இருப்பதாக கேப்டன் ஷன்டோ நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிஜூர் ரகுமான், நஹித் ராணா உள்ளிட்டோர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் வீழ்த்தியது போல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிப்பார்கள். அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 41 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 8-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ்.

வங்காளதேசம்:

தன்சித் ஹசன், சவுமியா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிஜூர் ரகுமான்.


Read Entire Article