ARTICLE AD BOX
சாதாரண மஞ்சள் வியாபரம் டூ ரூ.1530 கோடி சாம்ராஜ்ஜியம்.. கொடிகட்டி பறக்கும் சக்தி மசாலா..!!
நாட்டில் மிகப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் செய்ய இயலாத துணிச்சலான செயல்பாடுகளை சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டு அவர்களின் நேர்மையான உழைப்பால் உயர்ந்து நல்ல சேவைகள் செய்யும் நம்ம ஊர் தொழில் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி உழைப்பின் மூலமே உயர்ந்து இன்று சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம்.
திரு. P.C.துரைசாமி அவரது துணைவியார் சாந்தி துரைசாமி ஆகியோர் தான் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். சம்பளம் கொடுத்தால் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற முதலாளித்துவ சிந்தனையில்லாமல் தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் அக்கறை செலுத்துகிறார்கள். அதே போல் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுபவர்களான கண், கை, கால் என உடல் உறுப்பில் குறைபாடு இருக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு "உங்களால் முடியும். உழைப்புக்கு எதுவும் தடையில்லை" என அவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கை கொடுத்து அப்படிப்பட்டவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வைத்துள்ளார்கள் இந்த தொழிலதிபர்கள்.

கடந்த 1975ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிராமத்தில் சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தொடங்கப்பட்டது. பாரம்பரிய முறைகளையும், புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து, தரமான மசாலா தயாரிப்பில் சிறந்த இடத்தை பிடித்தது. சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் வருவாய் ஈட்டியது ரூ.1,530 கோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் 12% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்துள்ளது.
மசாலா வியாபாரத்தில் முன்னேற, டாக்டர் துரைசாமி கடின உழைப்பும், நேர்மையும் கொண்டிருந்தார். மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி போன்ற மசாலா பொடிகளை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார். இவரின் துணைவியார் டாக்டர் சந்தி துரைசாமி, அவருடன் உறுதுணையாக இருந்தார்.தரம் என்ற ஒன்றை மட்டும் முன்னிலைப்படுத்திய சக்தி மசாலா, தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, 1994, 2005, 2012 ஆகிய ஆண்டுகளில் 'நல்ல தரம் கொண்ட பொருட்கள்' விருதைப் பெற்றது.மேலும், நேர்மையான வணிக முறைகளுக்காக ஜம்னாலால் பஜாஜ் விருதினைப் 1992, 2001, 2012, 2020 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது.
இப்போது சக்தி மசாலா 50க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. இந்த தயாரிப்புகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. சக்தி மசாலா தனது தொழிற்சாலைகளில் சூரிய மற்றும் காற்று மின்சாரத்தை பயன்படுத்தி இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இவர்கள் சக்திதேவி சாரிட்டபிள் டிரஸ்ட், சக்தி மறுவாழ்வு மையம், சக்தி மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி ஆகியவற்றை அரசு அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.மேலும், சக்தி மருத்துவமனை மூலம் மருத்துவ சேவையும் வழங்கி வருகிறார். மேலும் பல கல்வி உதவிகளும் வழங்கி வருகிறார்.
இன்று சக்தி மசாலா ஒரு பெரிய வெற்றிக்கதை. சாதாரண மஞ்சள் வியாபாரமாக தொடங்கி, உலகப்புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. இது கடின உழைப்பும், நேர்மையும், மக்களின் நலனும் முக்கியம் என்பதை நிரூபிக்கிறது.மக்கள் நம்பிக்கையைப் பெற்ற வணிகம் உயர்ந்த தரம் மற்றும் நேர்மை ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக சேவை ,இவை அனைத்தும், சக்தி மசாலாவின் வளர்ச்சிக்கு வலுசேர்த்த காரணங்கள். ஒரு சாதாரண வியாபாரத்திலிருந்து, உலகம் அறியும் மசாலா பிராண்ட் ஆக வளர்ந்த சக்தி மசாலாவின் பயணம், கனவுகளை நிஜமாக்கும் அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும்