சாகித்ய அகாதெமி  விருதுக்குத் தேர்வான விமலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

11 hours ago
ARTICLE AD BOX

சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்

ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955ஆம் ஆண்டு முதல் சாகித்ய அகாதெமி  விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி  விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘என்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த படைப்பாளர் பேராசிரியர் விமலா சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வாகியுள்ளார். ‘எனது ஆண்கள்’ நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விமலா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாக பணியாற்றுகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா, டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை பயின்றார். இதுவரை 4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

Read Entire Article