ARTICLE AD BOX
பத்தாண்டுகளுக்கு முன்னால் நீங்கள் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? யாரிடம் அதைப்பற்றிப் பேசித் தீர்மானிப்பீர்கள்?
பெரும்பாலானோர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்களிடம் அதைப்பற்றிப் பேசுவார்கள், கடைக்குச் சென்று கடைக்காரரிடமும் பேசுவார்கள், பின்னர் தங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.
ஆனால், சமூக ஊடகங்கள் புகழ்பெறத் தொடங்கியபிறகு, இந்தப் பழக்கம் முற்றிலும் மாறிப்போயிருக்கிறது. மக்கள் இணையத்துக்குச் சென்று அந்தப் பொருட்களைப்பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் இல்லை, வாங்குகின்ற பொருளின் மதிப்பைப் பொறுத்துப் பல மணி நேரம் இணையத்தில் செலவிட்டு, பொதுமக்களுடைய கருத்துகளை, விமர்சனங்களை நுணுக்கமாக அலசி, ஆராய்ந்து, அதன்பிறகு தீர்மானிக்கிறவர்களும் உண்டு.
அதனால், முன்பெல்லாம் விளம்பரம் என்றால் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, அச்சு இதழ்கள் என்று சிந்தித்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது சமூக ஊடகங்களில் தங்களுடைய பொருட்கள், சேவைகளைப்பற்றிய தகவல்கள் விரிவாக வரவேண்டும், குறிப்பாக, மக்கள் அதைப்பற்றிப் பேசும்படி செய்யவேண்டும் என்று முனைகின்றன.
இதில் சிறப்பு என்னவென்றால், பழைய ஊடகங்களைப் பெரிய, நடுத்தர நிறுவனங்கள்மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். ஆனால், சமூக ஊடகங்கள் எல்லாருக்கும் கிடைக்கின்றன. ஒரு நபர் நிறுவனங்கள், சிறுதொழில்கள்கூடக் குறைந்த செலவில் இவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருட்களைச் சரியானவர்களுடைய பார்வைக்குக் கொண்டுசெல்ல இயலும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு புதிய உணவுப்பொருளை வெளியிடுகிறீர்கள் என்றால், முந்தைய 30 நாட்களில் உணவுப்பொருட்கள் தொடர்பான பதிவுகள், படங்கள், வீடியோக்கள், விளம்பரங்களை ஆர்வமாகப் பார்த்த மக்களிடம்மட்டும் அதைப்பற்றிய தகவல்களைக் காண்பிக்கலாம். அல்லது, ஒரு குறிப்பிட்ட நகரத்தைச் சேர்ந்தவர்கள், இந்த வயதில் உள்ளவர்களுக்குமட்டும்தான் இது சென்றுசேரவேண்டும் என்பதுபோல் விதிமுறைகளை எழுதலாம். இதன்மூலம் ஏதோ ஒரு திசையில் கல்லை வீசாமல், தொழில்நுட்பத்தின் உதவியுடன், நிறையப் பழங்கள் இருக்கக்கூடிய கிளையை நோக்கிக் கல்லெறியலாம்.
பழைய ஊடகங்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிலர்தான் விளம்பரத் தூதுவர்களாகச் செயல்பட்டுவந்தார்கள். ஆனால் இப்போது, சில நூறு பேரைச் சென்றடையக்கூடிய எல்லாரும் விளம்பரத் தூதுவர்கள்தான். நிறுவனங்கள் தங்களுடைய குறிப்பிட்ட பொருட்கள் அல்லது சேவைகளைப் பெரும்பாலானோரிடம் கொண்டுசெல்லவல்ல நபர்களைத் (Influencers) தேடிப் பிடித்து அவர்களுடன் பணியாற்றுகிறார்கள்.
இத்துடன், பொது மக்களையே (வாடிக்கையாளர்களையே) விளம்பரத் தூதர்களாக ஆக்கும் வசதியையும் சமூக ஊடகங்கள் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, சாக்லெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தன்னுடைய சாக்லெட்டுடன் செல்ஃபி எடுத்துக் குறிப்பிட்ட Hashtag குறிச்சொல்லுடன் வெளியிடுவோருக்குப் போட்டி ஒன்றை அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மக்கள் போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்துடன் இதில் ஈடுபடும்போது, அந்த செல்ஃபிகள் மற்றவர்களுடைய சமூக ஊடகப் பக்கங்களுக்கும் பரவலாகச் சென்றுசேர்கின்றன, அந்தச் சாக்லெட்டுக்கு விளம்பரமாகின்றன.
விற்பனைக்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர் சேவைக்கும் சமூக ஊடகம் மிகவும் பயன்படுகிறது. அரசாங்கம், கட்சித் தலைவர்களில் தொடங்கி நிறுவனங்கள், அமைப்புகள் என அனைத்துடனும் நேரடியாகப் பேசும் வசதியைச் சமூக ஊடகங்கள் தருகின்றன. நிறுவனங்கள் அந்தப் பதிவுகளைக் கவனித்து வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் சேவைத் தரத்தை மேம்படுத்தலாம்.
அடுத்து, புதிய பொருட்கள், சேவைகளை அறிமுகப்படுத்துவதற்குமுன் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் அதைப்பற்றிக் கருத்து கேட்பதற்குச் சமூக ஊடகங்கள் உதவும். எடுத்துக்காட்டாக, ஒரு பிஸ்கட் நிறுவனம் தன்னுடைய அடுத்த வெளியீட்டின் உறை வடிவங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அவற்றில் எந்த வடிவம் நன்றாக இருக்கிறது என்று மக்களுடைய கருத்துகளைக் கேட்கலாம். அல்லது, நீங்களே புதிய உறைகளை வடிவமையுங்கள் என்று போட்டி வைக்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், எல்லா நிறுவனங்களும் சமூக ஊடகங்களில் இருக்கவேண்டும் என்பது இன்றைய கட்டாயமாகிவிட்டது. அதைப் புரிந்துகொண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்வதும் சிறந்த தொழில் கருவியாக ஆக்கிக்கொள்வதும் அந்தந்த நிறுவனத்தின் திறமை.