ARTICLE AD BOX
புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறிய வங்கதேசத்தினரை பிடிக்க தில்லி காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 21 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் கூறியதாவது, 21 வங்கதேசத்தினரில் 18 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.
இதையும் படிக்க: விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? - ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி
கைது செய்யப்பட்ட 3 பேரின் மீதும் பாஹர்கஞ்சு காவல் துறையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு, இந்திய ஆவணங்கள் மற்றும் வங்கதேசத்தின் கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் இருவர் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவினுள் சட்டவிரோதமாக குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு உதவி செய்த தரகரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.