ARTICLE AD BOX
மார்கழி மாதக்குளிரும், தை மாத முகூர்த்தங்களும் சுற்றத்தில் சில துக்க நிகழ்ச்சிகளிலும், கல்யாணங்களுக்கும் போக நேர்ந்தது. இதில் பங்கேற்கும் போது இவை வெறும் சடங்காகிப் போய்விட்டதை உணரமுடிந்தது.. ஆத்மார்த்த ஈடுபாடு நடத்துபவருக்கும் இல்லை பங்கேற்பவருக்கும் இல்லை.
ஐம்பது வருடங்கள் முன்னர் ஒரு கல்யாணம் என்றால் உறவினர்கள் ஒன்று கூடி அனைத்து வேலைகளையும் பகிர்ந்து முழு ஈடுபாட்டுடன் செய்தனர். கல்யாண விருந்துக்குக் காய்கறிகள் வாங்குவது முதல் மண்டப அலங்காரம் ஜவுளி, நகை மற்றும் மங்கள சாமான்கள் வரை அனைத்து வேலைகளையும் நெருங்கிய உறவினர்கள் பங்கிட்டுச் செய்தனர். அடுத்த கட்ட உறவினர் மற்றும் நண்பர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து உபசரிக்கப்பட்டு திருப்தியாகச் சென்றனர். அதன் நினைவுகள் வெகு வருடங்கள் நினைவுகூரப்பட்டு நெஞ்சில் நிற்கும்.
உடன் பிறந்தவர்கள் அரை டஜன் பேர்கள் இருப்பர். அப்பா அம்மாவின் உடன் பிறந்தவர்கள் மற்றும் வாரிசுகளும் நெருங்கிய தொடர்பிலும், குறைந்த தூர இடைவெளியிலும் இருப்பர். வருமானம் அத்துமீறியும் இருந்ததில்லை வாழ்க்கை சிக்கல் நிறைந்தும் இருந்ததில்லை. தட்டையாகத்தான் இருந்தது, ஆனால் தடை மிகுந்ததாக இருந்ததில்லை.
சமூக வளர்ச்சியில் முதல் குறியீடே குறைக்கப்பட்ட வாரிசுகள் தான். குழந்தைகள் ஆறிலிருந்து இரண்டு மற்றும் மூன்று என்று ஆகி இப்போது ஒன்று அல்லது அதுவும் வேண்டாம் என்று வந்து நிற்கிறது. குடும்பம் குறுகிப்போனதால் மனிதனின் அடிப்படைத் தேவையான தொடர்புகள் நாடி நட்பு வட்டம் வளர்ந்தது. மேலும் ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்து படித்து, பணிபுரிந்த நிலை மாறி இன்னும் விரிந்து பறக்கத் துவங்கினோம்...
குறுகிய வட்டத்திற்குள் இருந்த பழகும் முறை விஸ்தரித்து ஊர்கள் போய் நாடுகளும் மாறத்தொடங்கினர். எளிய எதிர்பார்ப்பு இல்லாத மனநிலை தேவைகள் கூடி கனவுகள் விரிந்து வசதி வாய்ப்புகள் தேடி ஓடிப் போகத் துவங்கினர். இந்த ஓட்டம் அல்லது தாகம் வேகமும் தேடலும் கூடி இலக்கறியா பயணமாக இன்று மாறி நிற்கிறது. இந்த ஓட்டத்திற்கு உயரத்திற்கு இவர்கள் கொடுத்த விலை மிகவும் அதிகம்.
போட்டி மனப்பான்மை கூடிப்போனதால் வாய்ப்புகள் பல பெற்றதால் தேவைகள் அதிகரித்ததால் இந்த புதிய சுதந்திர போக்கை அனுபவிக்க ஆர்வம் மிகுந்தது. நேர் வழியில் இதனை பெறமுடியாதவர்கள் குறுக்கு வழிகளையும் கையாண்டனர். வசதி ஒன்றே பிரதானமாகி வழிகள் மறந்து இலக்கே குறிக்கோளானது.
இந்த வேகப்பயணத்தில் நேர்மை என்பது தொலைந்தது போல, உறவின் மகிமையும் காணாமல் போனது. எல்லா பெரியப்பா சித்தப்பாவும் அங்கிள் ஆகினர். எல்லா சித்தி, அத்தையும் ஆன்டி ஆனார்கள். உறவுகளின் பெயர்களும் சொல்லாடலும் மறந்து போனது.
நண்பர்கள் வட்டம் பெருகியது நல்லது தான். ஆனால் அதுவும் குறிக்கோள் சார்ந்தே பிரிந்து உள்ளது. ஆன்மீகத்திற்கு ஒரு வட்டம், உல்லாசத்திற்கு ஒரு வட்டம். இதர தேவைகளுக்கு ஏற்ப வட்டங்கள் வளர்ந்தன. தேவைகள் முடிந்ததும் பிரிந்து விடும் மேம்போக்கான கூட்டம். உயிர் கொடுக்கும் நண்பன் என்பதெல்லாம் நகைப்புக்கு உள்ளானது.
உறவுகளும் தொலைத்து நட்பும் தேவை சார்ந்து இயங்கியதால், வீட்டில் நடக்கும் நல்ல, கெட்ட வீசேச/விஷயங்களுக்கு அறிமுகமற்ற வேற்று நபர்களை நாடி பணம் கொடுத்தால் பணி முடிக்கும் நிலை ஏற்பட்டது. அப்பணிகளில் நேர்மையும் திறமையும் இருக்கலாம்; நேசமும் நெருக்கம் இருக்க வாய்ப்பில்லை.
உறவுகளும் நட்பு வட்டமும் வந்து சம்பிரதாயமாக கலந்து கொண்டு, உதட்டால் புன்னகைத்து, வரிசையில் நின்று பரிசுகள் கொடுத்து, விருந்துண்டு, சொல்லிக்கொள்ளாமல் விடை பெற்று சென்று விடுகின்றனர்.
உறவினர் கூட ஏன் அப்பா அம்மா கூட, 'நண்பர்களாக தான் நாங்கள் பழகுகிறோம்' என்பதை பெருமையாக பேசுகிறார்கள். அப்பாவின் கண்டிப்பில், அம்மாவின் எதிர்பார்ப்பில் பாசமும் நேசமும் இல்லையா? நட்பு தான் நெருக்கம் கொடுக்குமா? அத்தையும் சித்தப்பாவும் அறிவுரை கூறக்கூடாதா? கூறினால் பகையாகி விடுவார்களா? இந்த சிறிய ஏற்பும், ஏற்கக்கூட வேண்டாம்... சகிப்புத்தன்மையும், இல்லையென்றால் பரந்துபட்ட மனித சமூகத்தில் இணங்கி வாழ்வது எப்படி?