ARTICLE AD BOX
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள்
தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள், வழிப்பறி, கொள்ளை, கொலை என குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் தான். அந்த வகையில் கஞ்சா, அபின், குட்கா போன்ற சர்வ சாதாரணமாக கிடைத்து வந்தது. இதனையடுத்து போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள்
மேலும் கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் அவ்வப்போது போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துவருகின்றனர். அந்த வகையில், கோவையில் கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கிய வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது. கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்
இந்நிலையில் குனியமுத்தூர் காவல்துறை கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த தனியார் தங்கும் விடுதிகள், வீடுகள் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் கஞ்சா செடிகளை மாணவர்கள் வளர்த்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 22 கஞ்சா கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வெளியில் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து தாங்களாவே கஞ்சா தயாரிக்கும் வகையில் வீட்டிலோயே கஞ்சா செடி தோட்டத்தை வளர்த்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
இதனையடுத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த கல்லூரி மாணவர்களான கேரளா மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த விஷ்ணு (வயது 19), அரியலூரைச் சேர்ந்த கலைவாணன் (வயது 21), அனுருத் (வயது 19) தனுஷ் (வயது 19) அவினவ் (வயது 19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.