ARTICLE AD BOX
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்டுமான பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இந்நிலையில் விரிவான திட்ட அறிக்கையின் படி 3 கட்டிட மாதிரிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இறுதி செய்துள்ளது.
அடுத்த வாரம், இந்த மாதிரிகளை முதலமைச்சரிடம் விளையாட்டு துறை அதிகாரிகள் சமர்பிக்க உள்ளனர். மேலும், சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பான பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.