ARTICLE AD BOX
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன.

இதில் கடமான்கோம்பை என்ற கிராமம் இருக்கிறது. அங்கு மணி (45) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் பில்லூர் அணை அருகே உள்ள ரேஷன் கடைக்கு ரேஷன் பொருள்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது மணிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து மணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மணியின் சொந்த ஊரான கடமான்கோம்பைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டுள்ளது.
செல்லும் வழியில் நீராடி என்கிற பகுதியில் இருந்து கடமான்கோம்பை பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மணியின் சடலத்தை நீராடி பகுதியில் வைத்தே உறவினர்களிடம் ஒப்படைத்து சென்றுவிட்டனர்.

மணியின் உறவினர்கள் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 3 கி.மீ தொலைவுக்கு டோலி கட்டி உடலை கால்நடையாகவே தூக்கிச் சென்று தகனம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
