ARTICLE AD BOX
கோவை அவிநாசி சாலையில் பற்றி எரிந்த சொகுசு கார்.. உயிர் தப்பிய ஐடி ஊழியர்கள்
கோவை: கோவை அவினாசி சாலையில் சென்று கொண்டு இருந்த சொகுசு காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கார் கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் வந்தவர்கள் காரில் இறங்கிய நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரது நண்பர் வினோத் பெங்களூரில் இருந்து வேலை நிமித்தமாக கோவைக்கு வந்துள்ளார். நண்பர் வடிவேலின் மகேந்திரா மொரோசோ காரை அலுவலக சம்பந்தமாக எடுத்துக் கொண்டு அலுவலகப் பணிகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர், தனது அலுவலக நண்பருடன் தனியார் தங்கும் விடுதிக்கு வினோத் காரில் திரும்பிக் கொண்டுடிருந்துள்ளார். அப்போது, அவிநாசி சாலையில் உள்ள ஹோப்ஸ் காலேஜ் அருகே காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதையடுத்து, காரில் இருந்து வினோத் மற்றும் அவரது நண்பர் இருவரும் இறங்கியுள்ளனர்.
புகை வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டிகளின் வரத்து அதிகம் இருக்கும் பகுதி என்பதால் உடனடியாக அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.