ARTICLE AD BOX
தெலுங்கானா சுரங்க விபத்து.. 16 நாள் போராட்டத்துக்கு பின் ஒருவர் உடல் மீட்பு! தொடரும் சோகம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை என்ற கால்வாய் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தில் சிக்கி தவித்த 2 என் ஜினியர்கள், 6 தொழிலாளர்களை மீட்கும் பணி 16 வது நாளாக இன்றும் நடந்தது. இதில் இன்று ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றவர்களின் உடல்களும் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை என்ற கால்வாய் திட்டத்துக்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் நடந்து வந்தது. மொத்தம் 44 கிமீ தூரம் கொண்ட இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட 9 கிமீ தூரம் மட்டுமே பாக்கி இருந்தது. ஆனால் இந்த பணிகள் மேற்கொண்டு செய்யப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் தான் எஞ்சியுள்ள பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது.

சுரங்கம் தோண்டும் பணி
இதில் ஸ்ரீசைலம் முதல் நல்கொண்டா வரை 9 கிமீ தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது. இதில் தொழிலாளர்கள், என்ஜினியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள், என் ஜினியர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளுக்குள் மொத்தம் 8 பேர் சிக்கியது தெரியவந்தது.
மொத்தம் 50க்கும் மேற்பட்டவர்கள் சுரங்கம் தோண்டும் எந்திரத்துடன் உள்ளே சென்ற நிலையில் 42 பேர் தப்பி வெளியே வந்தனர். துரதிருஷ்டவசமாக மீதம் உள்ள 8 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். 2 என்ஜினியர்கள் உள்பட தொழிலாளர்கள் சிக்கினர். இதையடுத்து அவர்களை மீட்க உடனடியாக ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீட்பு பணியை அவ்வளவு எளிதாக மேற்கொள்ள முடியவில்லை.
16 நாட்களுக்கு பிறகு
இரவும் பகலுமாக தொடர்ந்து 9 படைகளின் மீட்பு பணிகள் நடந்து வந்தது. இன்று 16வது நாளாக மீட்பு பணி நடந்தது. அப்போது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் அருகே ஒருவரது கை தெரிந்ததாகவும், இதையடுத்து அந்த நபரின் உடல் இன்று மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடந்து அந்த இயந்திரத்தை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. 16 நாட்களுக்கு பிறகு ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மண்ணுக்குள் எந்த இடத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் தொடர்ந்து அவர்களது உடல்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதற்காக 15 அடி ஆழத்தில் உள்ள உடல்களை மோப்பம் பிடிக்கும் நாய்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து இந்த காடேவர் நாய்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெலுங்கானா நீர்வளத்துறை அமைச்சர் இதனை தேசிய பேரிடதாக அறிவித்து இருக்கிறார். இந்த துயர சம்பவம் அப்பகுதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.