ARTICLE AD BOX
கோத்தாரி குழுமம் தமிழ்நாட்டில் 7,300 கோடி முதலீடு.. இந்த மாவட்டங்கள்ல வேலைவாய்ப்பு வர போகுது..
சென்னை: சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (Kothari Industrial Corporation Ltd) நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 7300 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது .
அடுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உரம் தயாரிப்பு மற்றும் காலணி தொழில்களில் 7,300 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறோம் என கோத்தாரி குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் புதிதாக உரம் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என கோத்தாரி குழுமம் அறிவித்துள்ளது. அதேபோல கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்களுடைய பீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் காலணி உற்பத்தி ஆலைகளை அமைக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக கோதாரி குழுமத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரஃபீக் ஹமீத் அளித்த பேட்டியில் இந்தியாவில் தற்போது உரம் ,அம்மோனியா உள்ளிட்ட மூல பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என தெரிவித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உரங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் தங்களுடைய புதிய உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூடிய விரைவில் இடம் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இது தவிர கோத்தாரி குழுமம் கரூர் மற்றும் கள்ளக்குறிச்சியின் இறையூர் ஆகிய பகுதியில் காலணி உற்பத்தி ஆலைகளை அமைக்க இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள்ளேயே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விடும் என அவர் கூறியுள்ளார்.
தைவான் நாட்டை சேர்ந்த ஷூ டவுன் நிறுவனத்தோடு இணைந்து கோத்தாரி குழுமம் ஜேஆர் ஒன் ஃபுட்வேர் என்ற ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது இந்த இரண்டு நிறுவனங்களும் தான் இந்த காலணி உற்பத்தியில் ஈடுபட இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த நிறுவனங்கள் பெரம்பலூர் பகுதியில் காலணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இது தவிர தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஃபீக் தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் கோத்தாரி நிறுவனத்திற்கு சொந்தமாக மூன்று காலணி உற்பத்தி ஆலைகள் இருக்கும் என்றும் இதன் மூலம் சுமார் 57 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல ட்ரோன் பயிற்சி பள்ளியையும் நிறுவும் திட்டமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Story written by: Subramanian