ARTICLE AD BOX
தக்காளி சாற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தைவான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆய்வின் படி அதிக எடை கொண்ட இரண்டு இளம் பெண்களுக்கு எட்டு வாரங்கள் தினமும் 280 மி.லி தக்காளி சாறு வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டு பெண்களின் இரத்த மாதிரிகளில் உள்ள கொழுப்பின் அளவு சோதனை செய்யப்பட்டது. சோதனையில் முடிவில் தொடக்கத்தில் இருந்த கொழுப்பின் அளவு எட்டு வாரங்களுக்கு பின் கணிசமான அளவில் குறைந்துள்ளது. இரண்டு பெண்களின் இடுப்பு சுற்றளவுவும் குறைந்துள்ளது. கொழுப்பினால் ஏற்படும் வீக்கங்களும் கரைந்துள்ளது.
தக்காளி சாறு குடிப்பதனால் கொழுப்புகள், பெராக்சிடேட்டிவ் அழுத்தம் ஆகியவை குறைகின்றன. அது மட்டுமில்லாமல் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, தக்காளியில் உள்ள ஒரு வேதிப்பொருள் புரோஸ்டேட் புற்றுநோயில் காணப்படும் புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கிறது.
ஓஹியோவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வோன் ஜின் ஹோவின் ஆய்வறிக்கையில் தக்காளி சாற்றில் அதிகளவு லைகோபீன்கள் உள்ளன. சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில், லைக்கோபீன் அதிகளவில் உள்ளது. லைகோபீன் என்பது உடலை வளர்சிதை மாற்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு கரோட்டினாய்டு வேதிப்பொருள் ஆகும்.
லைகோபீன் மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகும். புகைபிடித்தல் , சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தவறான உணவு பழக்க வழக்கம் மூலமாக ஃப்ரீ ரேடிக்கல்கள் இயற்கையாகவே உடலில் உருவாகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்துகின்றன. இதனால் நீரிழிவு , இதயநோய் , புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. லைகோபீன் தீமையான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடக் கூடியது. உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரித்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது, இதய நோயிலிருந்து காக்கிறது. லைகோபீன் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டது. இதனால் தக்காளி சாற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தினமும் தக்காளியைப் சாற்றை குடித்து வருவதால், அதில் உள்ள வைட்டமின்கள் கண்பார்வையை தெளிவாக்குகின்றன. காலையில் இதை குடிப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய நோய்கள் வராமல் தடுக்கும். உடலின் செரிமான மண்டலங்களை சுத்தம் செய்து , எளிதில் ஜீரணமாக உதவுகிறது. தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம் , இரைப்பையில் உள்ள அதிக அமிலத் தன்மையை குறைக்கிறது.
தக்காளியில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் போது நன்மைகள் கிடைப்பதில்லை. காரணம் இந்திய சமையலின் வெப்ப நிலையில் தக்காளியின் சுவையை தவிர மற்ற பண்புகள் அழிந்து விடுகிறது. தக்காளியை சாலட்டில் சேர்க்கும் போதும், அதிகம் சூடு படுத்தாமல் சாப்பிடும் போதும் அதன் நன்மைகள் கிடைக்கும்.
சிலருக்கு தக்காளி ஒவ்வாமை மற்றும் இரைப்பை புண்கள் இருந்தால் பச்சையாக தக்காளியை சாப்பிடுவதை தவிர்க்கவும்.