கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

3 hours ago
ARTICLE AD BOX

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி 58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

ஜயமால்ய பாக்சியின் பதவி உயா்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 5 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியம் கடந்த வியாழக்கிழமை (மாா்ச் 6) பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சியின் நியமனம் குறித்த கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிட்டாா்.

முன்னதாக, கொலீஜியம் தனது பரிந்துரையில் தெரிவித்ததாவது: கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதியின் பிரதிநிதித்துவம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் தற்போது உள்ளது. நீதிபதி அல்தமஸ் கபீா் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜூலை 18-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிபதிகள் யாரும் உச்சநீதிமன்றத்துக்கு உயா்த்தப்படவில்லை.

உயா்நீதிமன்ற நீதிபதிகளில் அகில இந்திய அளவிலான பணி மூப்பு பட்டியலில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஜயமால்ய பாக்சி 13 ஆண்டுகளாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளாா். இதைக் கருத்தில் கொண்டு, அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரை செய்யப்படுகிறது என்று தெரிவித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி, 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிப்பாா். அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் 2031-ஆம் ஆண்டு, மே 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு அந்த ஆண்டு அக்டோபரில் தான் ஓய்வுபெறும் வரையில் தலைமை நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவி வகிப்பாா்.

இவரது நியமனத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் 33-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் மம்தா வாழ்த்து: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியான ஜயமால்ய பாக்சி உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். இந்த நியமனம் எங்களுக்கு பெருமை சோ்க்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக பாக்சிக்கு அற்புதமான பணி அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

Read Entire Article