கோடை விடுமறை துவங்க போகிறது. இந்தியாவில் குடும்பத்துடன் சென்று ஜாலியாக விடுமுறையை என்ஜாய் செய்து விட்டு வருவதற்கு ஏற்ற இடங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம். இந்த வருடம் இந்தியாவில் உள்ள இந்த நகரங்களுக்கு ஒரு வித்தியாசமான டிரிப் சென்று விட்டு வாருங்கள்.

சில்லிகா ஏரி, ஒடிஷா
ஆசியாவிலேயே நீளமான பிராக்கிஷ் வாட்டர் கொண்ட கழிமுகப் பகுதி இதுதான். சிலிகா ஏரி இயற்கை விரும்பிகளின் சொர்க்கப் பூமியாகும். அருமையான படகு சவாரியை இங்கு மேற்கொள்ளலாம். இடம் பெயர்ந்து வரும் பறவைக் கூட்டம் மனதைக் கொள்ளை கொள்ளும். டால்பின்களின் விளையாட்டுக்களையும் இங்கு கண்டு களிக்க முடியும். குளிர்காலத்தில் இந்தப் பகுதி பார்க்கவே சூப்பராக இருக்கும்.
லோனார் கிரேட்டர், மகாராஷ்டிரா
ஒரு பெரிய எரிகள் விழுந்து இந்த பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதுதான் லோனார் கிரேட்டரின் கதை. இயற்கையின் அதிசயமாக இது பார்க்கப்படுகிறது. சுற்றிலும் பச்சைப் பசேல் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும். பழமையான கோவில்களும் சுற்றிலும் உண்டு. டிரெக்கிங் போகவும் அருமையான இடம். குடும்பத்தோடு போக வேண்டிய அருமையான இடம் என்பதில் சந்தேகம் இல்லை.
சோப்டா, உத்தரகாண்ட்
இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுவது சோப்டா. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தப் பகுதியானது ஆன்மீக ரீதியிலும், அட்வென்ச்சர் ரீதியிலும் அட்டகாசமான ஊராகும். துங்காநாத் போன்ற பழமையான கோவில்கள் இங்கு நிறைந்து காணப்படுகிறது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான ஊர் சோப்டா. குடும்பத்தோடு சென்று மகிழ்ச்சியாக திரும்பி வர ஏற்ற ஊர்.
மஜூலி, அசாம்
கிழக்கு இந்திய மாநிலமான அசாமின் மஜூலி, உலகிலேயே மிகவும் நீளமான ஆற்றுத் தீவு ஆகும். அமைதின்னா அமைதி, அமைதியோ அமைதி இந்தப் பகுதியில் நிரம்பி வழிகிறது. இந்தப் பகுதியின் கலாச்சாரம் இங்கு காண்பதற்கு சுகமானது. மேலும் வண்ணமயமான கலாச்சார விழாக்களும் இங்கு அதிகம் உண்டு. ஓய்வுக்கும், கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கும் ஏற்ற இடம் இது.

செட்டிநாடு, தமிழ்நாடு
தமிழ்நாட்டின் செட்டிநாடு கலாச்சாரம் மிகப் பழமையானது, பாரம்பரியம் கொண்டது. உலகப் புகழ் பெற்றதும் கூட. கட்டடக் கலைக்குப் பெயர் போனது, சாப்பாட்டுக்கு மிகப் புகழ் பெற்றது. குடும்பத்தோடு செல்ல அருமையான இடம் தான் செட்டிநாடு. மாளிகை போன்ற வீடுகள், கோவில்கள், அன்பான மக்கள், அருமையான சமையல் என்று திரும்பிய பக்கமெல்லாம் திவ்வியமாக இருப்பது செட்டிநாடு.
தோலவிரா, குஜராத்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தோலவிரா, யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரீக காலத்து இடம் இது. பழமையான கலாச்சாரம், வாழ்க்கை முறையை இந்தப் பகுதிக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். ஆதி மனிதர்களின் மிச்சம் இங்கு காணப்படுகிறது.
பூ பள்ளத்தாக்கு, உத்தரகாண்ட்
பூக்களின் பள்ளத்தாக்கு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. அருமையான பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகு பூமி இது. பார்க்கவே மனதைக் கொள்ளையடிக்கும் இயற்கை எழிலுக்கு இங்கு பஞ்சமே இல்லை. குடும்பத்தோடு சென்று மலைகளின் அழகையும் இயற்கையின் எழிலையும் கண்டு களிக்க முடியும்.
லாயிட்லம் கேன்யான், மேகாலயா
பசுமையான பள்ளத்தாக்குகள், மிகப் பெரிய ஆறுகள் என்று பார்க்கவே சூப்பரான இடம் இது. இயற்கையை விரும்புகிறவர்களுக்கு இது உகந்த இடமாகும். மேகாலயாவின் இயற்கை எழிலுக்கு இது ஒரு சின்ன சாம்பிள்.
பிம்பேத்கா, மத்தியப் பிரதேசம்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மலைப் பகுதி இது. நிறைய குகை ஓவியங்கள், சிற்பங்களை இங்கு காணலாம். யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த சுற்றுலாவுக்கும் இது சிறந்த இடமாகும்.
படான், குஜராத்
பல்வேறு புராதன கட்டடங்கள், கோவில்கள், அரண்மனை நிறைந்த பகுதி இது. கலை நயத்துக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் போனது இது. குஜராத்தின் மிகச் செழுமையான கட்டடக் கலையை இது பிரதிபலிப்பதாக உள்ளது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet