கேதார்நாத் கோவிலை சுற்றி இத்தனை சூப்பரான இடங்களா? இதுவரை தெரியாம போச்சே

3 hours ago
ARTICLE AD BOX

உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் புகழ்பெற்ற புனித யாத்திரை தலமாகும். இந்தப் புனிதத் தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் சென்று பார்வையிட வேண்டிய முக்கிய ஸ்தலங்கள், ஏரிகள், பனிமூடிய மலைகள், இயற்கை எழில் கொஞ்சும் ஆறுகள் மற்றும் அமைதியான குகைகள் போன்ற இடங்களும் உள்ளன. இந்த இடங்கள், உங்கள் கேதார்நாத் கோயில் யாத்திரையை மேலும் சிறப்பாக்கும். இவை ஆன்மிகத்தையும், இயற்கை அழகையும் ஒருங்கிணைத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

Kedarnath temple

கேதார்நாத்தில் பார்வையிட வேண்டிய 10 முக்கியமான இடங்கள்:

1.வாசுகி தால்

கேதார்நாத் கோயிலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், இமயமலையில் 16,332 அடி உயரத்தில் சுற்றி பனிமலைகளால் சூழப்பட்டு எழில் மிகுந்து காணப்படும் இந்த ஏரியின் தூய்மையான நீரில் நீராடினால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.கேதார்நாத் ஆன்மீக யாத்திரை முடிந்த பிறகு பக்தர்களும், பயணிகளும் செல்லும் சிறந்த ஒரு இடமாக வாசுகி தால் உள்ளது.

2.காந்தி சரோவர்(சோராபாரி தால்)

கேதார்நாத் கோயிலிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இமயமலைகளால் சூழப்பட்டு இயற்கை அழகுடன் காணப்படும் இந்த ஏரியின் நீர் கண்ணாடி போல் காட்சியளிப்பதால் இது " கிளியர் லேக்" என்றும் 1948-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் இங்கே கரைக்கப்பட்டதால், இந்த ஏரி "காந்தி சாரோவர்" என்றும் அழைக்கப்படுகிறது.

Kedarnath temple

3.பைரவநாதர் கோயில்:

கேதார்நாத் கோயிலிலிருந்து சுமார் 500 மீட்டர் உயர மலைச் சிகரத்தில் அமைந்துள்ள புனித தலம். இக்கோயிலில் சிவபெருமான் காவல் ரூபமான "கால பைரவர்" ஆக மாறி கேதார்நாத் கோயிலின் பாதுகாவலராக இருப்பதாக நம்பப்படுகிறது. கேதார்நாத் கோயில் மூடப்படும் போது, பைரவநாதர் கோயிலில் வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

4.குப்தகாசி:

கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த நகரம், விஸ்வநாதர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்களால் ஆன்மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகாபாரத யுத்தத்திற்குப் பிறகு, பாண்டவர்கள், சிவபெருமானை தரிசிக்க வந்த போது, அவர்களை தவிர்க்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் இங்கு மறைந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிவன் மற்றும் பார்வதி இணைந்த வடிவமாக காட்சியளிக்கின்றனர்.

5.சோனப்ரயாக்:

சோனப்ரயாக், மந்தாகினி மற்றும் பாசுகி கங்கா நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள இந்த இடம், கேதார்நாத் யாத்திரையின் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. புராணங்களின் படி, இங்கு நீராடுவதால் வாழ்க்கையின் பாவங்கள் நீங்கி முக்தி அடையலாம் என நம்பப்படுகிறது.

6.திரியுகி நாராயண் கோயில்:

திரியுகிநாராயண் கோயில், கேதார்நாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மிகப் புகழ்பெற்ற விஷ்ணு கோயிலாகும். இந்தக் கோயிலில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலின் முக்கிய சிறப்பம்சம் "அகண்ட ஜோதி" என அழைக்கப்படும் தீபம் மூன்று யுகங்களாக அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

7.கௌரிகுண்ட்:

கௌரிகுண்ட், இங்கிருந்து தான் கேதார்நாத் கோயில் யாத்திரை ஆரம்பமாகிறது. இங்கு பார்வதி தேவி சிவபெருமானை மணப்பதற்காக கடுமையாக தவம் செய்ததாக நம்பப்படுகிறது.இங்கு உள்ள வெந்நீரூற்றில் பக்தர்கள் புனித நீராட வருகிறார்கள். இந்த வெந்நீரூற்று பார்வதி தேவியின் சக்தி பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.

8.ருத்ரா தியான குகை :

கேதார்நாத் கோயிலுக்கு அருகில் உள்ள பனி மூடிய மலைகள் மற்றும் மந்தாகினி ஆற்றின் அருகே இயற்கை சூழலில் அமைந்துள்ள அமைதியான குகை ருத்ரா தியான குகை ஆகும். அமைதி மற்றும் ஆன்மிகத்துடன் இணைந்து இருக்க விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து இங்கு தங்கி தியானம் செய்யலாம். தியானம் மற்றும் யோகா செய்வதற்காக அடிப்படை மற்றும் சிறப்பு வசதிகள் உள்ளன. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு இங்கே தியானம் செய்த பிறகு இக்குகை மிகவும் பிரபலமாகியுள்ளது.

Kedarnath

9.காளிமத் கோயில்:

கேதார்நாத் கோயிலுக்கு அருகிலுள்ள காளிமத் கோயில், சக்தியின் ரகசிய தலமாக விளங்குகிறது. புராணங்களின்படி, ரக்தபீஜனை அழித்தபின் அந்த சக்தியை காளி தேவி இங்கு தரையில் மறைத்ததாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில், மற்ற சக்தி கோயில்களில் உள்ளது போல் இங்கு காளி தேவியின் சிலைக்கு பதிலாக சக்தி பீடம் என்னும் பூஜை மேடையே வழிபாடுக்காக உள்ளது. இந்த கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தீபாவளி அன்று இரவில் நடைபெறும் சிறப்பு பூஜையின் போது மட்டுமே கோயில் பூஜாரி தரையைத் திறந்து காளி தேவியின் சக்தியை தரிசிக்கிறார்கள்.

10.ஆதி சங்கராசாரியர் நினைவிடம்:

கேதார்நாத் கோயிலின் பின்புறம் பனிமலைகளால் சூழப்பட்ட அமைதியான இடத்தில் ஆதி சங்கராசாரியர் நினைவிடம் அமைந்துள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்டி, அத்வைத வேதாந்த தத்துவத்தை உலகிற்கு பரப்பிய ஆதி சங்கராசாரியர் இங்கு தனது உலக வாழ்வை விட்டு, கயிலாயம் சென்றதாக நம்பப்படுகிறது.

Read more about: kedarnath uttarakhand
Read Entire Article