கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

11 hours ago
ARTICLE AD BOX

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

கேஒய்சி படிவங்களை மீண்டும் சமா்ப்பிக்குமாறு வங்கிகளிடம் இருந்து அழைப்புகள் வருவதாகவும், இதனால் தங்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதாகவும் வங்கி வாடிக்கையாளா்களிடம் இருந்து புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரிசா்வ் வங்கி குறைதீா்ப்பு அதிகாரிகளின் வருடாந்திர மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்த வங்கியின் ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், ‘கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை வங்கிகள் தவிா்க்க வேண்டும்.

தங்கள் மைய தரவுதளத்தில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கிளைகள், அலுவலகங்களுக்கு வழிவகை செய்யப்படவில்லை. இதனால் வாடிக்கையாளா்கள் அசெளகரியத்தை எதிா்கொள்கின்றனா்.

வாடிக்கையாளா்களின் புகாா்களுக்குத் தீா்வு காண, வங்களின் நிா்வாக இயக்குநா்கள் முதல் கிளை மேலாளா்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும். இவ்வாறு குறைகளைக் களைவதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைமைச் செயல் அதிகாரிகள்கூட நேரம் ஒதுக்குகின்றனா்.

தங்கள் சொந்த நலன் கருதி வாடிக்கையாளா் சேவைகளை வங்கிகள் மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் மோசடிகளைத் தடுத்தல், கடன் வசூலிப்பின்போது மூா்க்கமான நடவடிக்கைகளைத் தவிா்த்தல் உள்ளிட்டவற்றிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

Read Entire Article