ARTICLE AD BOX
Published : 22 Feb 2025 05:03 PM
Last Updated : 22 Feb 2025 05:03 PM
கேஐஐடி மீது ‘குற்றச்சாட்டு’ - ஒடிசாவில் இருந்து 159 மாணவர்கள் நேபாளம் திரும்பியதன் பின்னணி

காத்மாண்டு: ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) மாணவி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரணமாக நேபாள மாணவர்களை விடுதியை காலி செய்ய கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதால் 159 மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். மேலும், தங்களை மனிதாபிமானமற்ற முறையில் கேஐஐடி நிர்வாகம் நடத்தியது என்றும் அந்த மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
கேஐஐடி-யில் மூன்றாம் ஆண்டு பி டெக் (கணினி அறிவியல்) படித்து வந்த மாணவி பிரகிருதி லாம்சல் (20) கடந்த 16 அன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கேஐஐடி-யில் சுமார் 1,000 நேபாள மாணவர்கள் படிக்கும் நிலையில், இந்தச் சம்பவம் கல்வி நிறுவன வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, நேபாளத்தைச் சேர்ந்த 159 மாணவர்கள் ரக்சால் எல்லை வழியாக தாயகம் திரும்பியதாக அந்நாட்டின் உயர் அதிகாரி சுமன் குமார் கார்கி தெரிவித்துள்ளார். காத்மாண்டுவில் உள்ள ரிப்போர்ட்டர்ஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய நேபாளம் திரும்பிய மாணவர்கள் குழு, “கல்லூரி விடுதியில் நேபாள மாணவி இறந்த பிறகு, கேஐஐடி நிர்வாகம் எங்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. பிரகிருதி லாம்சலின் மர்மமான மரணத்துக்குப் பிறகு, எங்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் முன்னிலையில் பாதுகாப்புக் காவலர்களால் நாங்கள் தாக்கப்பட்டோம். உடனடியாக விடுதியை காலி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். தற்போது கல்லூரி நிர்வாகம் உறுதிமொழிகளை அளித்தாலும், படிப்பதற்கு பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழல் அங்கு இல்லை. பிரகிருதி லாம்சலின் மரணம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினர்.
இதனிடையே, நேபாள மாணவியின் மரணத்தால் எழுந்த பிரச்சினையை அரசு தூதரக ரீதியில் தீர்த்து வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அர்சு ராணா தியூபா தெரிவித்தார். 8-வது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஓமன் சென்றிருந்த டியூபா, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஒடிசாவின் கேஐஐடி-யில் நேபாள மாணவி இறந்ததைச் சுற்றியுள்ள பிரச்சினையை நேபாள அரசு தூதரக வழிகளில் தீர்த்து வைத்துள்ளது, நிலைமையை தீவிரமாகக் கையாண்டுள்ளது” என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒடிசா உயர் கல்வி அமைச்சர் சூர்யபன்ஷி சூராஜிடம் பேசியதாகவும், மாணவியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதையும், நேபாள மாணவர்கள் தங்கள் விடுதிகளுக்குத் திரும்பி வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்ததாகவும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
நேபாள வெளியுறவு அமைச்சகம் எடுத்த முயற்சிக்குப் பிறகு, ஒடிசா அரசு இந்தப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், உயர்மட்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
"எங்கள் பதிலுக்குப் பிறகு, கல்லூரி இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது. நேபாள மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட அதன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பிரகிருதி லாம்சலுக்கு நீதி கோரி பர்சா மாவட்டத்தின் பிர்கஞ்சில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல், இறந்த மாணவியின் சொந்த மாவட்டமான ரூபந்தேஹியின் பைரஹாவாவில் நீதி கேட்டு மாணவர்கள் குழு ஒன்று எதிர்ப்பு பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- அமெரிக்க விமானப்படை ஜெனரலை பதவி நீக்கம் செய்த ட்ரம்ப்: காரணம் என்ன?
- மொரிஷியஸ் தேசிய தின கொண்டாட்டம்: சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
- பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம்: கவனம் ஈர்த்த எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல்!
- ‘ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை!’ - மீண்டும் மீண்டும் ஓரங்கட்டும் ட்ரம்ப்