ARTICLE AD BOX
மீதமான குழம்பு, சாம்பார் கொண்டு சுவையான டிபன் சுலபமாக செய்துவிடலாம். தேவையான அளவுக்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக்கிளறவும். வித்தியாசமான சுவையில் இன்ஸ்டன்ட் கிச்சடி ரெடி.
கெட்டித் தயிர் வேண்டுமா? கெட்டியான தயிர் கிடைக்க பாலினை வழக்கத்தைவிட பத்து நிமிடங்கள் கூடுதலாக கொதிக்க விட வேண்டும். பின்பு ஆறவிட்டு அதில் உறை மோரைச் சேர்த்தால் கெட்டியான தயிர் கிடைக்கும்
வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது, அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும். இதனால் வெண்டைக்காயின் பிசுபிசுத்தன்மை நீங்குவதுடன் சுவையும் நன்றாக இருக்கும்.
கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.
முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளிக்கூட வராது.
மெதுவடைக்கு உளுத்தம் பருப்பை ஊறவைக்கும்போது, அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவில் வடை சுட்டால் வடை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
பாயசம் நீர்த்துவிட்டால் அதனுடன் வாழைப்பழம் மசித்துச் சேர்த்தால் பாயசம் கெட்டியாகிவிடும்.
அடைக்கு மாவு அரைக்கும்போது, இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து அடைக்கு மாவு அரைக்கும்போது சேர்த்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.
சப்பாத்திக்கு குருமா செய்யும்போது கேரட், பீட்ரூட்டுடன் பப்பாளிக்காயையும் தோல் சீவி பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். சுவை வித்தியாசமாக இருக்கும்.
பொரி உருண்டை, வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை தயாரிக்கும்போது கையில் சிறிதளவு நெய் தடவிக் கொள்ளலாம். இதனால் சுலபமாக உருண்டை பிடிக்க வரும்.
பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.
பஜ்ஜி செய்யும்போது சோடாமாவு சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு கரண்டி தோசைமாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.