ARTICLE AD BOX
பகலில் வெயில் அதிகம் இருந்தாலும், இரவில் காலையில் பனியும் குளிரும் அதிகமாகவே இருக்கிறது. இதனால், பலருக்கும் சளி இருக்கிறது. கபத்தைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அதே போல, பலரும் உடலில் கெட்டக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். உடலில் கெட்டக் கொழுப்பு, கபம் குறைய வேண்டுமா, அப்போது தினமும் 8-10 மிளகு எடுத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அந்த மிளகை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.
தமிழ் பாரம்பரியத்தில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும் மூலிகைப் பொருளாகவும் விளங்கும் மிளகுவின் மருத்துவ குணம் அதன் நன்மைகள் குறித்து ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் மருத்துவர் கு. சிவராமன் கூறியதை அப்படியே இங்கே தருகிறோம். “மிளகு பார்ப்பதற்கு ஒரு சின்ன பொருளாக இருந்தால்கூட, அது கொடுக்கக்கூடிய மருத்துவப் பயன் மலையளவு என்று சொல்லலாம். ஒரு சாதாரண சின்ன காய்ச்சல், சளி, ஜுரத்தில் இருந்து புற்றுநோய் வரைக்கும் பல நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் மிளகுக்கு இருக்கிறது. அந்தக் காலத்தில் நமக்கு காரப்பொருள் என்றால் அது மிளகுதான், இன்றைக்கு நாம் காரத்திற்கு பயன்படுத்தும் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் எல்லாம் இடைக்காலத்தில் வந்தது. சிலி என்ற நாட்டில் இருந்து வந்ததால்தான் மிளகாய்க்கு ஆங்கிலத்தில் சில்லிஸ் என்று பெயர். தென் அமெரிக்க நாடான சிலியில் இருந்து வந்த போருள்தான் இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய மிளகாய். அதற்கு முன்னாடி, நமக்கு காரம் வேண்டும் என்றால் பல நெடுங்காலமாக பயன்படுத்தியது மிளகுதான்.
மிளகாய் என்கிற பெயரே மிளகு + ஆய் - அதாவது மிளகைப் போன்று காரம் தருவதால்தான் அதற்கு பெயர் மிளகாய் என்று நம்ம தமிழ்மக்கள் வைத்தார்கள். அதனால், நமக்கு முதலில் காரத்தன்மை, காரச்சுவை கொடுத்தது மிளகுதான்.
இந்த மிளகுக்கும் மிளகாய்க்கும் என்ன வித்தியாசம் என்றால், இரண்டும் காரத்தைதான் கொடுக்கிறது. ஆனால், மிளகாய் நாம் நிறைய சாப்பிட்டால் அல்சர் வரும். வாய்ப்புண்களை உண்டாக்கும். மிளகாய் வற்றலை அளவுக்கு அதிகமாக எடுத்தால் அது புற்றுநோயைக்கூட உண்டாக்கக்கூடியது. ஆனால், மிளகு அதற்கு நேர் எதிர், மிளகு தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும். புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய தன்மை மிளகுக்கு உண்டும். அந்த அளவுக்கு ஒரு முக்கியமான பொருள் மிளகு.
தினசரி உணவில் நமக்கு எங்கெல்லாம் காரம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம், நாம் இப்போது மிளகாய் வத்தல் போடுகிறோம். அப்படி போடாமல் மிளகு தூளைப் போடலாம். அப்படி மிளகு தூள் போடும்போது, அவர்களுடைய செல் மீடியேட் இம்யூனிட்டி அதாவது நோய் எதிர்ப்பு ஆற்றல் தன்மையை இந்த மிளகு உண்டாக்கும். சளி, இருமல் வந்தால் மிளகு கஷாயம் போட்டு கொடுக்கலாம். தும்மல், மூக்கடைப்பு, நீரேற்றம், தலைவலி, சைனட்டீஸ் உள்ளவர்களுக்கு மிளகு பயன்படும்.
நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு மிளகு மிகச்சிறந்த மருந்து. மிளகு கல்பம் என்று சொல்லி சித்த மருந்துகளில் ஒரு மருந்தைச் செய்வார்கள். மிளகை தயிரில் துவைத்து வைத்து, அதற்கு பிறகு, எலுமிச்சை சாறு, வேலிப்பருத்தி சாறு, கற்பூரவல்லி, துளசி இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எளிய மூலிகைகளை எல்லாம் அதில் பாவனம் பண்ணி, பொடியாக வைத்திருப்பார்கள். அந்த பொடியை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்வார்கள். ஆஸ்துமா, சளி இருக்கிறவர்களுக்கு அந்த மிளகைத் தூளைக் கொடுக்கச் சொல்வார்கள்.
மூட்டு வலிக்கு மிளகு ரொம்ப நல்லது. வெர்ட்டிகோ என்கிற தலைச் சுற்றலுக்கு மிளகு ரொம்ப நல்லது. வெண்படை என்கிற தோலில் வருகிற நோய்க்கு இந்த மிளகு பயனுடையது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, மிளகு நம்முடைய கெட்டக் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ரால் நோய்களுக்கு மிளகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் கூடாமல் பாதுகாக்கிறது என்று இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. இப்படி மிளகைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு மிளகு நமக்கு பல நோய்கள் வராமல் தடுத்து பாதுகாக்கிறது.
அதே போல, மிளகை நாம் பயன்படுத்துவதில் அக்கறையாக இருக்க வேண்டும். மிளகு தூளாக பயன்படுத்துவதைவிடம் மிளகைப் அப்போதே பொடி செய்து பயன்படுத்துவதுதான் நல்லது.
எங்கெல்லாம் நமக்கு காரம் நிறைய தேவைப்படுகிறதோ, அங்கெல்லம் மிள்கைப் பயன்படுத்தலாம். மிளகு நிறைய பயன்படுத்தினால், உடல் சூடாகிவிடாதா, வயிறு புண் ஆகிவிடாதா என்று சில கேட்கிறார்கள். மிளகை ஒரு நாளைக்கு 8-10 சேர்ப்பதால் உடல் சூடு வராது அதனால், வயிறு புண்கள் வராது. மிளகாய் வத்தல் வயிற்றுப்புண்ணை உண்டாக்கும், ஆனால், மிளகு வயிற்றுப் புண்ணை உண்டாக்காது.
கபத்தைக் குறைக்க வேண்டும், குளிர்ச்சியைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த இடங்களில் எல்லாம் மிளகை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் குழந்தைகள் பொங்கல் சாப்பிடும்போது மிளகை தனியாக எடுத்து வைத்துவிடுவார்கள். அந்த குழந்தைகளுக்கு மிளகு சாப்பிட வேண்டும். மிளகு சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது என்று சொல்லி அறிவுறுத்துங்கள். ஏனென்றால், 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம். அதற்கு என்ன பொருள் என்றால், ஒரு பகைவன் உணவில் தெரியாமல் நஞ்சு கலந்துவிட்டாலும், அந்த மிளகை நஞ்சை முறித்துவிடும் என்று பொருள். யாரும் நஞ்சைக் கலக்கப்போவதில்லை. ஆனால், சுற்றுச்சூழல் முழுவதும் நஞ்சாகிப்போயிருக்கிறது. அதனால், நாமும் உணவில் அன்றாடம் 10 மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.