குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

3 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.

காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலக்‌ஷ்மி கோயிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவின் ஒருபகுதியாக இந்த விநோத நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதற்காக தேரின் மேலே அமர்ந்துகொள்ளும் பூசாரி தம்மிடம் மேலே கொண்டு வந்த தரப்படும் குழந்தைகளை கீழே திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களை நோக்கி வீசுவார். அப்போது, தரையில் நிற்கும் பக்தர்கள் பெரிய போர்வையை விரித்துப் பிடித்துக்கொள்வர்.

தேரிலிருந்து கீழே வீசப்படும் குழந்தைகள் ஒவ்வொன்றாக போர்வைகளில் வந்து விழுந்ததும் அந்த குழந்தைகளை அவர்தம் பெற்றோர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

இதன்மூலம், லக்‌ஷ்மிதேவியின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் இந்த சடங்கு நல்லதாக அமையுமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த காலங்களில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் கீழே வீசப்பட்டு வந்த நிலையில், இப்போது பாதுகாப்பு கருதி அந்த உயரம் 6 அடியாகக் குறைக்கப்பட்டு இந்த சடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த விசேஷ சடங்கைக் காண கர்நாடகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதைக் காண முடிகிறது. கர்நாடகத்தின் வடக்கு பகுதிகளில் அதிலும் குறிப்பாக, பல்லாரி, கோப்பல், பாகல்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சடங்கு மிகப் பிரபலம்.

இத்தகைய வினோத சடங்குகளால் குழந்தைகளுக்கு உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதையடுத்து, இந்த சடங்கை தடை செய்ய வேண்டுமென சமூக செயல்பாட்டாளர்கல் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், வடக்கு கர்நாடக மாவட்டங்களில் பல இடங்களில் அதிகாரிகள் இந்த சடங்கை நடத்தவிடாமல் தடுக்க முயற்சிகள் எடுத்தாலும், அதையும் மீறி கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் இந்த வினோத வழிபாட்டு முறையை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

Read Entire Article