பிரபல சேனலில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வணிக ரியாலிட்டி ஷோ ஷார்க் டேங்க் இந்தியா. பல சீசன்களாக ஷார்க் டேங்க் இந்தியா ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த ஷோவின் நீதிபதி குழுவில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார். அவர்தான் ஸ்ரீகாந்த் பொல்லா. பொல்லாண்ட் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் மற்றும் தலைவர்.
அவர் பெரிய பிசினஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ஆனால் அவர் பார்வை குறைபாடு உள்ள நபர். உடல்ரீதியாக குறைபாடு இருந்தபோதிலும், நிறுவன உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும், ஒரு கொடையாளராகவும் உள்ளார். ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் நீதிபதிகளில் ஒருவராக இணைவதாக இன்ஸ்டாகிராமில் பதிவில் போலா தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் பொல்லா அந்த பதிவில், சுறாக்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க நீங்களே அதில் ஒன்றாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டு, உண்மை சொல்வதானால், ஷார்க் டேங்கின் காரணமாக இந்தியாவில் தொழில்முனைவு மிகவும் மனதை கவரும் ஊக்கத்தை பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் உள்ளவர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருக்கும்போது சமூகத்தில் உள்ள சில பழங்கால பிரச்சினைகளையும் சில நவீன பிரச்சினைகளையும் தீர்க்க தயாராக இருப்பதாகத் தோன்றியது என பதிவு செய்து இருந்தார். பொல்லாவின் பொல்லாண்ட் இண்டஸ்ட்ரீஸ் பாக்கு சார்ந்த தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.
இவரது நிறுவனம் ஆண்டுக்கு 15 கோடி டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. இவரது நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஸ்ரீகாந்த் பொல்லாவின் நிறுவனத்துக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் ஆதரவு இருந்தது. தற்போது பெரிய பிசினஸ்மேனான வலம் வரும் பொல்லாவின் இளமை காலம் மிகவும் கடினமான ஒன்றாக இருந்துள்ளது.
1991 ஜூலை 7ம் தேதியன்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டிணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்தார். பொல்லாவின் பெற்றோர் முறையான கல்வி இல்லாத விவசாயிகள். அந்த சிறிய நகரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு இல்லாததால் பொல்லா கஷ்டங்களை எதிர்கொண்டார்.

12ம் வகுப்பு தேர்வில் 98 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற போதிலும், கல்லூரி சேர்க்கையில் சிக்கல்களை சந்தித்தார். கல்லூரியில் சேர அவர் சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. பொல்லா ஒரு என்ஜினியராக விரும்பினார். ஆனால் ஐஐடி பயிற்சி மையங்கள் அவரை சேர்க்க மறுத்து விட்டன.
பல நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களான ஸ்டான்போர்ட், பெர்க்லி மற்றும் கார்னகி மெல்லன் போன்றவற்றில் அவர் விண்ணப்பித்தார். இறுதியில் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) உள்ள மதிப்புமிக்க ஸ்லோன் மேலாண்மை பள்ளியில் சேர்ந்தார். அந்த பள்ளியில் சேர்ந்த முதல் பார்வை குறைபாடு உள்ள மாணவர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஐடியில் இருந்த காலத்தில், பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி பயிற்சி மையத்தை அமைத்தார். 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய பொல்லா, லீட் இந்தியா திட்டத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை வழங்கினார்.
2011ம் ஆண்டில், பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சமன்வாய் மையத்தை இணைந்து தொடங்கினார். பார்வை குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு உதவ ஒரு பிரெய்லி அச்சகத்தை தொடங்கினார். தனது சாதனைகளின் காரணமாக, 2017 ஏப்ரலில் ஃபோர்ப்ஸின் 30 வயதுக்குட்பட்ட 30 பட்டியலில் அவரது பெயரும் இடம் பிடித்தது. அந்த ஆண்டு ஃபோர்ப்ஸால் அங்கீகரிக்கப்பட்ட 3 இந்தியர்களில் அவரும் ஒருவர்.