ARTICLE AD BOX
மார்த்தாண்டம்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வழியாக தினமும் கேரளாவுக்கு லாரிகள் செல்கின்றன. நேஷனல் பர்மிட் சரக்கு வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் மஞ்சள் பெயிண்ட் அடிக்க தேவையில்லை. ஆனால் நேஷனல் பர்மிட் அல்லாத சரக்கு வாகனங்கள் முன்புறமும், பின்புறமும் மஞ்சள் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. ஆனால் பெரும்பாலான வாகனங்களில் மஞ்சள் பெயிண்ட் அடிப்பதை தவிர்த்து நேஷனல் பர்மிட் என்பதை குறிக்கும் என்பி என்று போலியாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கனரக வாகனங்களின் பின்புறம் தடுப்புகள் அமைப்பது கட்டாயம்.
ஆனால் பல வாகனங்களில் பின்புறம் தடுப்பு அமைக்காமல் ஆபத்தான முறையில் கனிமவளங்களை ஏற்றி செல்கின்றன. அதேபோல ஒரு சில கனரக வாகனங்களில் பாடி உயரத்தை செயற்கையாக ஒன்று முதல் இரண்டு அடி உயரம் வரை உயர்த்தி கனிம வள கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். 12 சக்கரங்களுக்கு மேலான சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லும் போது அனைத்து சக்கரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கனரக கனிம வள கடத்தல் வாகனங்கள் அனைத்து சக்கரங்களையும் பயன்படுத்தாமல் செல்லும் காட்சி வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை தேவை
சாதாரணமாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதை கண்டால் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் அந்த வாகனங்கள் மீது அபராதம் விதிப்பது வழக்கமாக உள்ளது. அதே போல போக்குவரத்து சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனிமவள கடத்தல் வாகனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
The post குமரியில் போலி உரிமங்களுடன் விதிமீறும் கனரக வாகனங்கள் appeared first on Dinakaran.