ARTICLE AD BOX
ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற வெறுப்புகளும், பகைகளும் நிரந்தரமாகி விடக்கூடாது. அதை தலைமுறை தலைமுறைகளுக்கு கொண்டு செல்லக் கூடாது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் சகஜம்தான். அதையே சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தால் குடும்பத்தில் பிளவுகள்,பிரிவுகள் ஏற்பட்டு குடும்பம் சின்னா பின்னமாகிப் போகும்.
அதேபோல் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியில் ஏற்படுகின்ற சிறு சிறு சண்டைகளையும், மனக்கஷ்டங்களையும், வேதனைகளையும் கூட்டிப் பெருக்கி மலைகளாக்கி அதன் மூலம் அர்த்தமற்ற வெறுப்புகளை வளர்த்து அதை நிரந்தரமாக்க கூடாது.
எதையும் மனம் விட்டுப் பேசி உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு எக்காரணம் கொண்டும் உங்கள் குடும்பத்தைச் பற்றியும், குடும்ப அங்கத்தினர்கள் பத்தி மற்றவர்களிடம் தரக் குறைவாகப் சொல்லக் கூடாது. நீங்களே தரக்குறைவாக உங்கள் குடும்பத்தைச் பற்றிப் பேசினால் வெளியில் இருப்பவர்கள் ஏன் பேச மாட்டார்கள்?
உங்கள் குடும்பத்தை எப்போதும் உங்கள் குடும்பமாகவே வைத்திருங்கள். குடும்பத்தை பந்தாக்கி விடாதீர்கள். அது கண்டவரது கால்களினால் உதைக்கப்பட்டு சீரழிந்து உருண்டோடும். அதே சமயத்தில் அடுத்தவர்கள் குடும்பத்தைப்பற்றியோ, அடுத்தவர்களை பற்றியோ மற்றவர்கள் தரக்குறைவாக பேச வரும்போது கேளாமல் ஒதுங்கிப் போய்விடுங்கள்.
அவர்கள் எதற்காகக் கூறுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை நீங்கள் அனுமதி த்தீர்களானால் உங்கள் மனம்தான் பாதிக்கப்படும். அடுத்தவர் குடும்ப விவகாரங்களில் தலையிடக்கூடாது.
தேவையற்ற, ஆதாரமற்ற, வீண்பழி சுமத்துகிற வகையில் தரக் குறைவாக பேசாதீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகள் முன் எது பேசினாலும் உண்மையான தாகவும், நேர்மையானதாகவும், சரியான தகவல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களைப் பிடிக்கக்கூடாது, பகை கொள்ள வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. உங்களுக்கு ஒருவரைப் பிடிக்க வில்லை என்றால், அவரோடு நீங்கள் பகையாளியாக இருக்கிறீர்கள் என்றால் அதை உங்களோடு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
அதை மற்றவர்களிடம் பரப்பாதீர்கள். அது உங்கள் சொந்த குடும்ப அங்கத்தினராக இருந்தாலும் சரி மற்ற உற்றார் உறவினர்கள் ஆகவும் அவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் ஆக இருந்தாலும் சரி உங்கள் பகையை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். மற்றவர்கள் அவர்களாகவே முடிவு எடுக்கட்டும்.
ஒவ்வொருவருக்குள் இருந்துதான் மனித நேயம் அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் பரப்பப்படுகிறது. அந்த குடும்பத்திலிருந்துதான் மற்ற குடும்பங்களுக்கு மனித நேயம் பரவுகின்றது. அதன்வழி, சமுதாயப் முழுவதும் பரவி உலகளவிற்குப் பரவுகின்றது. ஆகவே வெறுப்பு பகையை வளர்ப்பதற்கும் பதிலாக மனித நேயத்தை நிரந்தரமாக்க வேண்டும்.