ARTICLE AD BOX
சரண்,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. 2016-ம் ஆண்டு முதல் பீகாரில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு அவருடைய அரசு தடை விதித்து உள்ளது. இந்நிலையில், கலால் துறைக்கான காவல் நிலையம் ஒன்றில் காவலர்களே குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
பீகாரின் சரண் மாவட்டத்தில் மஷ்ராக் பகுதியில் கலால் துறைக்கான காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், அந்த காவல் நிலையத்திற்கு நேரில் சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில், கலால் துறையை சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி சரண் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பசந்தி தொட்டோ கூறும்போது, அவர்கள் 3 பேரும் குடிபோதையில் காவல் நிலையத்தில் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தபடி இருந்தனர். இதனால், கலால் துறை போலீசார் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர் என்றார்.
அவர்கள் கலால் துறையை சேர்ந்த ஆய்வாளர் சுனில் குமார், துணை ஆய்வாளர் குந்தன் குமார் மற்றும் கான்ஸ்டபிள் சந்தோஷ் குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 6 போலீசாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்களிடம் இருந்து 5 லிட்டர் அளவிலான, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தொட்டோ கூறியுள்ளார்.