ARTICLE AD BOX
தினமும் ஏதாவது மோசடிகள் நடக்கத்தான் செய்கின்றன. தற்போது கிறிஸ் கெயில் பெயர் சொல்லி 5.7 கோடி ரூபாய் மோசடி செய்து ஒரு குழு ஹைத்ராபாதையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கிறிஸ் கெயில் ஐபிஎல் மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகவும் தெரிந்தவர் ஆனார். அதுவரையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்தவர், ஐபிஎல் மூலமும், சில விளம்பரங்கள் மூலமும் இந்தியாவில் பிரபலமானார். இதனால்தான் அவர் பெயரைப் பயன்படுத்தி கென்யாவைச் சேர்ந்த காபி தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக கிறிஸ் கெயில் செயல்படுவதாக கூறி, ஒரு பெண்ணிடம் ரூ.2.8 கோடி முதலீடு செய்யத் தூண்டியுள்ளனர். இந்த மோசடியில் அவரது சகோதரரும் உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் முதலீடு செய்தால் 4 சதவீதம் லாபம் கிட்டும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளனர். கிறிஸ் கெயில் விளம்பரங்களையும் தம்பியின் வார்த்தைகளையும் நம்பிய அந்த பெண் ரூ.2.8 கோடி முதலீடு செய்ததோடு, தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். இதனால் மொத்தமாக ரூ.5.7 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முதலில் லாபம் வந்ததால், சந்தேகத்திற்கே இடமில்லாமல் இருந்தது. ஆனால், சில காலத்திற்கு பின்னர் எந்த தொகையும் வரவில்லை. இதுகுறித்து அந்த பெண், அந்த தம்பியிடம் கேட்டிருக்கிறார். அவர் இந்த நிறுவனம் அமெரிக்காவில் இன்னும் செயல்பட்டுவருவதாக கூறி சமாளித்திருக்கிறார். மேலும் கேள்விகள் கேட்டபோது தம்பியிடமிருந்து பதில்கள் சரியாக வரவில்லை. இதனால், ரூ.5.7 கோடி முதலீடு செய்தவர்களில், தற்போது ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அந்த பெண் உட்பட பணம் முதலீடு செய்தவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதில் 6 பேர் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் கிறிஸ் கெயிலின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், போலீசார் இது தொடர்பாக மேலும் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.
ஆகையால், உஷார் மக்களே!! இன்னும் எத்தனை ஐடியாக்களை கையில் வைத்திருக்கிறார்களோ, இந்த மோசடிக் காரர்கள்.