கிரிக்கெட் ஆட்டம் தடைப்பட்டால்... 'டக்வோர்த் லூயிஸ்' முறை சொல்வது என்ன?

20 hours ago
ARTICLE AD BOX

வானிலை அல்லது பிற காரணங்களால் கிரிக்கெட் ஆட்டம் தடைப்படும் போது, முடிவை அறிவிக்கப் பயன்படுத்தப்படும் டக்வோர்த் லூயிஸ் முறை!

பன்னாட்டுக் கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளில் வானிலை அல்லது பிற காரணங்களால் ஆட்டம் தடைப்பட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை கணிதவியலின் உதவியுடன் நிர்ணயிக்கின்றனர். இதனை, டக்வோர்த் லூயிஸ் முறை (Duckworth - Lewis Method) என்கின்றனர். இம்முறையானது, ஆங்கிலேயப் புள்ளியியலாளர்களாகிய பிராங் டக்வோர்த், டொனி லூயிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும். இம்முறையினை, பன்னாட்டுக் கிரிக்கெட் மன்றம் சீர்தரமாக (நியமமாக) ஏற்றுக் கொண்டுள்ளது. இது பொதுவாக, நியாயமான, துல்லியமான இலக்கை நிர்ணயிக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஆட்டம் இயல்பாக முடிந்திருந்தால் என்ன நடந்திருக்கலாம்? என்று முன்னுரைக்க முயல்வதால் சில நேரங்களில் இம்முறையானது சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Frank Duckworth, Tony Lewis
Frank Duckworth, Tony Lewis

இங்கு எடுத்துக்காட்டாக, முதல்முறை ஆட்டத்தின் போது ஆட்டம் தடைப்பட்டால், 2008 தொடரில் நான்காவது இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் முதல்முறை ஆட்டமே மழையினால் இருமுறை தடைப்பட்டு ஒவ்வொரு அணியும் 22 ஓவர்களே விளையாடுமாறு அமைந்தது. முதலில் ஆடிய இந்தியா 166/4 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் ஓட்ட இலக்கு டக்வோர்த் லூயிஸ் முறையில் 22 ஓவர்களில் 198 ஓட்டங்களாக இறுதியிடப்பட்டது.

இந்த எடுத்துக்காட்டில், முதல்முறை ஆடும் அணியின் ஆட்டம் தடைபட்டால் இரண்டாம் முறை ஆடும் அணியின் இலக்கு டக்வோர்த் லூயிஸ் முறையில் எவ்வாறு கூடுதலாகிறது என்பதை விளக்குகிறது. இங்கிலாந்து அணிக்கு முன்னதாகவே 22 ஓவர்கள் மட்டுமே ஆட வேண்டும் என்பது தெரிந்திருந்தமையால் தடைப்பட்ட முதல்முறை ஆட்டத்தில் இந்தியா எடுத்த ஓட்டங்களை விடக் கூடுதலாக எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியுள்ளது. இங்கிலாந்து 22 ஓவர்களில் 178/8 எடுத்ததால் ஆட்டத்தை இந்தியா டக்வோர்த் லூயிஸ் முறையில் 19 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, இரண்டாம் முறை ஆட்டத்தின் போது ஆட்டம் தடைபட்டால்...? 2006 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் நடந்த முதல் ஒரு நாள் போட்டி ஓர் எளிய எடுத்துக்காட்டாகும்.

முதலில் ஆடிய இந்தியா 49-வது ஓவரிலேயே 328 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவதாக ஆடிய பாக்கிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 47 வது ஓவரில் ஒளிக்குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாக்கிஸ்தானின் இலக்கு, ஆட்டம் தொடர்ந்திருந்தால் மூன்று ஓவர்களில் (18 பந்துகளில்) 18 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆட்டத்தில் எடுத்த ஓட்ட வேகத்தைக் கணித்தால், இதனைப் பெரும்பாலான அணிகள் எட்ட இயலும். டக்வோர்த் லூயிஸ் முறையின் படியும் ஓட்ட இலக்கு 47 ஓவர் முடிவில் 304 ஓட்டங்களாக இருந்தது. எனவே, பாக்கித்தான் டக்வோர்த் லூயிஸ் முறையில் 7 ஓட்ட வேறுபாட்டில் வென்றதாக பதியப்பட்டது.

இதேபோன்று, T20 ஆட்டங்களில் 2010 பன்னாட்டுக் கிரிக்கெட் அமைப்பு உலகக் கோப்பை T 20 போட்டிகளில் டக்வோர்த் லூயிஸ் முறை, இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான குழுநிலை ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இலங்கை முதலில் ஆடி 20 ஓவர்களில் 173/7 ஓட்டங்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஜிம்பாப்வே அணி 5 ஓவர்களில் 29/1 எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இலங்கை டக்வோர்த் லூயிஸ் முறையில் 14 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

அதே நாளில், மற்றொரு குழுநிலை ஆட்டத்தில் இங்கிலாந்திற்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையேயான ஆட்டத்திலும் மழை காரணமாக டக்வோர்த் லூயிஸ் முறை பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து தனக்கான 20 ஓவர்களில் 191/5 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஆடியபோது 30/0 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 2.2 ஓவர்களில் ஆட்டம் தடைபட்டது. டக்வோர்த் லூயிஸ் முறைப்படி மேற்கு இந்தியத் தீவுகளுக்கான ஓட்ட இலக்கு 6 ஓவர்களில் 60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அவ்வணி ஒரு பந்து மீதம் உள்ள போதே எடுத்து வென்றது. இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த பவுல் காலிங்வுட் டக்வோர்த் லூயிஸ் முறையைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது இருபது 20 ஆட்டங்களுக்கு சரிவருமா என்ற கேள்வியையும் எழுப்பினார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

டக்வோர்த் லூயிஸ் முறையின் சாராம்சம் வளங்கள் ஆகும். ஒவ்வொரு அணியும் மிகுந்த கூடுதல் ஓட்டங்கள் எடுக்க இரு வளங்களைக் கொண்டுள்ளன; பெறவிருக்கும் ஓவர்களின் (அல்லது பந்துகளின்) எண்ணிக்கை மற்றும் இன்னும் விழாத விக்கெட்கள். எந்த முறை ஆட்டத்திலும் எந்த நிலையிலும் ஓர் அணி கூடுதலாக எடுக்கக்கூடிய ஓட்டங்களின் எண்ணிக்கை இந்த இரு வளங்களைப் பொறுத்தே அமையும். பல்லாண்டு ஓட்ட எண்ணிக்கைகளை ஆராய்ந்தால் ஓர் அணியின் இறுதி எண்ணிக்கைக்கும், அந்த அணிக்குக் கிடைத்த இவ்விரு வளங்களுக்கும் இடையே ஓர் ஒப்பு இயைபு இருப்பதைக் காணலாம். இதனையே டக்வோர்த் லூயிஸ் முறை பயன்படுத்துகிறது.

அச்சிடப்பட்ட அட்டவணைகளிலிருந்து, இவ்விரு வளங்களின் சதவீதத்தை மீதமிருக்கும் ஓவர்கள் (அல்லது பந்துகள்) மற்றும் விக்கெட்கள் இழப்பு இவற்றைக் கொண்டு அறிந்து மேற்பட்டு எழும் வளங்களின் குறைவிற்கு ஏற்ப மேலேயோ கீழேயோ சரி செய்து ஓட்ட இலக்கினை நிர்ண்யிக்க முடியும். இந்தச் சதவீதத்தைக் கொண்டு கணக்கிடப்படும் இலக்கு சமன் என்று கூறப்படும். இரண்டாவது அணி இதனை எட்டினால் வென்றதாக அறிவிக்கப்படும். அதே இலக்கை (கீழுள்ள முழு எண்ணிற்கு திருத்தப்பட்டது) அடைந்தால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாகக் கொள்ளப்படும்.

இம்முறையில் ஆட்டத்தின் வெற்றி தோல்விகளை கணக்கிட ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைந்தது 20 ஓவர்களும் இருபது 20 ஆட்டங்களில் குறைந்தது 5 ஓவர்களும் ஆடப்பட்டிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
'காலாவதியானது ஒருநாள் கிரிக்கெட்' இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கதறல்!
Duckworth - Lewis Method

டக்வோர்த் லூயிஸ் முறையினைத் தவிர்த்து, கிரிக்கெட் விளையாட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழையாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ போட்டி தடைப்பட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்கு ஜயதேவன் முறை அல்லது வி. ஜே. டி. முறை எனும் முறையும் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த வி. ஜெயதேவன் என்ற பொறியியலாளரால் இம்முறை உருவாக்கப்பட்டது. நடைமுறையில் இருந்து வரும் டக்வோர்த் லூயிஸ் முறைக்கு மாற்றாக இந்தியக் கிரிக்கெட் கூட்டமைப்பு போட்டிகளில் ஜயதேவன் முறை பயன்படுத்தப்பட்டது.

பொதுவாக, டக்வோர்த் லூயிஸ் முறை, ஜயதேவன் முறை என்று இரண்டுமே சிறந்த கணித முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதால், இதில் தவறுகள் எழுவதற்கு வாய்ப்புகளில்லை. இருப்பினும் சில வேளைகளில், இம்முறைகளின் மீது சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழத்தான் செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தமிழக அரசு விடுதிகள் நடத்துவது பற்றி தெரியுமா?
Duckworth - Lewis Method
Read Entire Article