டெல்லி: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் திடீரென தங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உள்ளீட்டு செலவினம் மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்திருப்பதாலேயே கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுசுகி நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.

செலவினங்களை கட்டுப்படுத்தி வாடிக்கையாளர்கள் மீது திணிக்க கூடாது என்று முயற்சி செய்ததாகவும் இருந்தாலும் சில செலவினங்கள் அதிகரித்ததால் அதனை வாடிக்கையாளர் மீது சுமத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்ச மூலப் பொருட்கள் கட்டணம், தளவாடச் செலவினங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் தான் மாருதி சுசுகி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி கடந்த டிசம்பர் மாதம் தான் ஜனவரியிலிருந்து தங்கள் நிறுவன கார்களின் விலையை 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதன்படி பார்க்கும்போது ஜனவரி மாதம் 4% ஏப்ரல் மாதம் 4% என நான்கு மாதங்களில் 8% வரை கார்களின் விலையை மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில வகை மாடல்களுக்கான விலையை மட்டும் பிப்ரவரி மாதத்தில் 1500 ரூபாயிலிருந்து 32,500 வரை மாருதி சுசுகி உயர்த்தியது. இப்படி அடுத்தடுத்த கார்களின் விலை உயர்த்துவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி சுசுகி தங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் அதன் பங்கு மதிப்பு 2 சதவீதம் வரை உயர்ந்தது. மார்ச் 17ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் மாருதி சுசுகியின் ஒரு பங்கு மதிப்பு 11,548 ரூபாய் என வர்த்தகமானது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய வாகன விற்பனை சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வாகன விற்பனையில் 41.6% பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. உலகிலேயே மூன்றாவது பெரிய வாகன விற்பனை நாடாக இந்தியா இருக்கிறது, வாகன உற்பத்தியில் நான்காவது பெரிய நாடாக இந்தியா செயல்படுகிறது. அடுத்தடுத்து கார்களின் விலையை உயர்த்தினாலும் இந்தியர்களுக்கு பிடித்த நிறுவனமாக மாருதி சுசுகி தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.