ARTICLE AD BOX
பூனேயில் இருக்கும் தகடுஷேத் ஹல்வாய் கணபதி மந்திர்க்கும் இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த ஒவ்வொரு பொருளுக்கும் இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது. நாம் எடுக்கும் ஆயுள் காப்பீடும் முதலீடுதான். அதுவும் ஒரு சேமிப்பே. அதை முதலீடு மற்றும் சேமிப்பு என்று சொல்லலாம். ஒரு மனிதன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் பொழுதே மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, அவசர கால நிதி, சேமிப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
நம் முதல் தேவை குடும்பத்தில் வருமானம் ஈட்டுவதற்கு தேவையான அளவு ஆயுள் காப்பீடு எடுப்பதுதான். ஆண்டு வருமானத்தைபோல 15 - 20 மடங்கு தேவை. வீட்டில் எப்பொழுதும் எல்லாமும் நல்லதாகவே நடக்கவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பமும்.
சில சமயங்களில் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அப்பொழுது குடும்ப சூழலில் குடும்பத்தை காக்கப் போவது அவர் எடுத்து வைத்திருக்கும் ஒரு கோடிக்கு அதிகமான ஆயுள் காப்பீடுதான். அதன் பிறகுதான் சேமிப்பு சேர்ந்து கை கொடுக்கும்.
அடுத்ததாக குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அவசியம். இது இல்லாமல் எத்தனை லட்சம் சேமித்து வைத்திருந்தாலும் ஏதோ ஒரு மருத்துவ அவசரத்தில் எல்லாம் கரைந்துவிடும். இப்பொழுது எல்லாம் சாதாரண சளி, தலைவலி என்று சென்றால் கூட எக்ஸ்ரேயிலிருந்து ஸ்கேன்வரை எடுக்க வேண்டி இருக்கிறது. அப்பொழுது சேமிப்பை மட்டுமே வைத்து சமாளிக்க முடியாது. அதற்கு மருத்துவ காப்பீடு இருந்தால் அது நல்ல பலத்தை கொடுக்கும்.
பின்னர் அவசரகால நிதிக்கு கையிருப்பில் கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டியது அவசியம். வாகனப் பழுதிலிருந்து குழந்தைகள் படிப்பு செலவு, வீட்டில் ஏற்படும் சுப நிகழ்ச்சிகளுக்கு, சமயத்தில் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படலாம், இது போன்ற திடீர் செலவுகளை சமாளிக்க மற்றும் வீட்டில் மராமத்து பணிகள் போன்ற சின்னதும் பெரிதுமாக உள்ள செலவுகளை சமாளிக்க கையிருப்பில் பணம் இருந்தால் வசதியாக இருக்கும்.
ஆகையால் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, அவசர கால நிதி போன்றவற்றிற்கு சம்பாதிக்கும் பொழுதே அதற்கான பணத்தை ஒதுக்கி வைத்து எடுத்துவிட்டு, சேமிப்பு மற்றும் முதலீடு என்று தனியாக செய்ய தொடங்கினால் பலமான அஸ்திவாரம் உள்ள வீடு எப்படி உறுதியாக இருக்குமோ அதுபோல் வீட்டு நிதி நிலைமை நிலைகுலையாமல் இருக்கும்.
வாழ்வின் போதும் வாழ்விற்கு பின்பும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இன்னும் ஆயுள் காப்பீடு எடுப்பதை பலர் அலட்சியமாகவும், பயமாகவும் பார்ப்பதை காணமுடிகிறது. அதை இயல்பாக எடுத்துக் கொண்டால் தைரியம் மேலோங்கும். வீட்டாரின் நலம் காக்க நாம் செய்யும் காப்பீடு முக்கியமானது என்பதை நினைவில் கொள்வோம். அப்பொழுது காப்பீடு செய்ய துணியாதவர்களும் துணிவது நிச்சயம்!